ஆஹா என்ன வரிகள் 16: "ஞாபகங்கள் தீ மூட்டும்.. ஞாபகங்கள் நீரூற்றும்" நினைவுகளை தாலாட்டும் ஏதோ ஒரு பாட்டு!
ஆஹா என்ன வரிகள் தொடரில் காலத்தை கடந்து நிற்கும் பாடல் வரிகள் பற்றி பார்த்து வருகிறோம். ஞாபகங்களின் சிறப்புகள் பற்றி கூறும் என்னைத் தாலாட்ட பாடல் வரிகள் பற்றி கீழே காணலாம்.
ஞாபகங்களுக்கு என்று அபாரமான சக்தி உண்டு. நம்மை உற்சாகப்படுத்தவும், நம்மை சோர்வடைய வைக்கவும் என ஒரு மனிதனின் மன நிலையை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் ஆற்றல் கொண்டது இந்த ஞாபகங்கள்.
மருந்தாக, மனபாரமாக மாறும் நினைவுகள்:
மனிதர்கள் எப்போதும் தங்களது வாழ்வில் நிகழ்ந்த பல இனிமையான நினைவுகளினால் உள்ளுக்குள்ளே குதூகலித்தும், கசப்பான நினைவுகளினால் உள்ளுக்குள்ளே அழுதும் தவித்து வருவது அவர்களின் குணாதிசயங்கள் ஆகும். அதுவும் வயது முதிர்ந்த முதியவர்களுக்கும், தனிமையில் இருப்பவர்களுக்கும் ஞாபகங்கள் என்பது அருமருந்தாகவும், ஆறாத காயமாகவும் அமைகிறது.
அப்பேற்பட்ட ஞாபகங்களை பற்றி எழுதப்பட்டிருக்கும் பாடல்தான் ஏதோ ஒரு பாட்டு. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் கலைக்குமாரின் அற்புதமான வரிகளில் இந்த பாடல் உருவாகியிருக்கும். ஹரிஹரின் இந்த பாடலுக்கு தனது குரலால் உயிர் கொடுத்திருப்பார்.
"ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்..
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்.."
என்று இந்த பாடலை பாடலாசிரியர் தொடங்கியிருப்பார்.
சில பாடல்களை கேட்கும்போது நமக்கு சிலரின் நினைவுகள் வருவது இயல்பு. அந்த நினைவுகள் அவர்களுடன் நாம் கழித்த இனிமையான பொழுதுகளை கண்முன் கொண்டு வந்துவிடும். அதையே பாடலாசிரியர் அழகாக வரிகளாக மாற்றியிருப்பார்.
ஞாபகங்கள் தீ மூட்டும்.. ஞாபகங்கள் நீரூற்றும்:
அடுத்த வரிகளில், சிலரின் நினைவுகளிலோ மூழ்கியிருக்கும் சிலரின் கண்களில் அவர்களைப் பற்றிய சிந்தனைகளும், அவர்களை பிரிந்திருந்தால் அந்த ஏக்கமும் எப்போதும் இருக்கும். நாம் உயிர் வாழ நமது மூச்சே பிரதானம். அதுபோல நம் உயிரில் கலந்த உறவாக மாறியிருக்கும் சிலரின் நினைவுகள் நமக்கு மூச்சுக்காற்று போல ஆகும். அவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மூச்சுக்காற்றைத் தவிர்க்க முடியாதது போல அவர்களின் நினைவுகளையும் தவிர்க்க முடியாது.
சிலரின் நினைவுகள் நமக்கு மழை போல ஆனந்தத்தையும், சில நினைவுகள் நமக்கு குடை போலவும், சில ஞாபகங்கள் நம் மனதை காயப்படுத்தும், சில ஞாபகங்கள் நெஞ்சுக்கு நிம்மதியாக அமையும் என்று பாடலாசிரியர் நினைவுகளை வர்ணித்திருப்பார். அதையே வரிகளாக,
"என் கண்களின் இமைகளிலே…
உன் ஞாபகம் சிறகடிக்கும்..
நான் சுவாசிக்கும் மூச்சினிலே..
உன் ஞாபகம் கலந்திருக்கும்…
ஞாபகங்கள் மழையாகும்..
ஞாபகங்கள் குடையாகும்..
ஞாபகங்கள் தீ மூட்டும்..
ஞாபகங்கள் நீரூற்றும்.."
என்று எழுதியிருப்பார்.
உன் பெயரே கவிதை:
நமக்கு பிடித்தவர்களை பார்த்தால் மட்டுமின்றி அவர்களது பெயர்களை கேட்டாலே நம் மனதுக்குள் ஒரு ஆனந்தம் உண்டாகும். சில இசைகளை கேட்கும்போது அவர்களுடன் பேசிய பொழுதுகள் நமக்கு நினைவூட்டும். ஒரு பெண்ணின் பரு என்பது அவளுக்கு பேரழகாவே, அவளை விரும்புவனால் ரசிக்கப்படும். அந்த பருவை ரோஜாவின் பனித்துளியாக அவன் பார்ப்பான் என்று பாடலாசிரியர் வர்ணித்திருப்பார்.
ஒரு பெண்ணின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவளது மச்சமாகவே ஆணால் பார்க்கப்படும். அந்த மச்சத்தை அதிர்ஷ்டமாகவும், ஒரு ஆண் நேசிக்கும் பெண்ணே அவனுக்கு பிரபஞ்ச அழகி. அதனால், அழகு என்றாலே அவள்தான் என்று பாடலாசிரியர் அவளைப் பற்றிய நினைவுகளை தவிக்கும் அவனின் தவிப்பை ஒப்பிட்டிருப்பார்.
அதையே பாடலாசிரியர்,
"கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே..
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே..
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே..
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்..
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்.."
என்று எழுதியிருப்பார்.
உன்னால் என்னைப் பற்றிய நினைவுகள் இல்லை:
அடுத்த வரிகளில், துணையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு, வாசலைப் பார்த்தால் தென்றல் காற்று போல தன் துணை எப்போது தன்னைத் தேடி வருவாள்/வருவான் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை அந்த வாசலை பார்த்தாலே நீ எப்போது என் வீட்டிற்கு என் துணையாக வருவாயோ? என்ற ஞாபகம் என்னுள் ஊஞ்சலாடுகிறது என பாடலாசிரியர் எழுதியிருப்பார். தொட்டாச்சிணுங்கி செடி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நாம் தொட்டாலே சுருங்கி விடும் தொட்டாச்சிணுங்கியைப் பார்த்தாலே அவளின் வெட்கம் நினைவுகளாக என்னைச் சூழ்கிறது.
கரையைத் தேடி திரும்ப திரும்ப வரும் அலைகள் போல உன்னைப் பற்றிய நினைவுகள் மட்டுமே என்னுள் வந்து கொண்டே இருப்பதால், என்னைப் பற்றியே ஞாபகங்களே எனக்கு இல்லாமல் போய்விட்டது என்று பாடலாசிரியர் எழுதியிருப்பார். அதையே வரிகளாக,
"தென்றல் என்றால் உன் வாசல் ஞாபகமே…
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே..
தொட்டால் சுருங்கி பார்த்தால்..
உந்தன் வெட்கம் ஞாபகமே..
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்..
மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்.."
என்று அற்புதமாக எழுதியிருப்பார்.
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அவரது மரணம் வரை யாரோ ஒருவரின் நினைவுகள் நெஞ்சுக்குள் ஆழமாக நிறைந்திருக்கும். அந்த நினைவுகளுடன் அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பசுமையான, இனிமையான, கசப்பான அனுபவங்களும் நிறைந்திருக்கும். அந்த நினைவுகளைப் போற்றியும், யாருடைய நினைவுகளை சுமக்கிறோமோ அவர்களை பற்றியும் பாடலாசிரியர் மிக அற்புதமாக இந்த பாடலில் எழுதியிருப்பார்.
அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்.
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 15: துணையற்றவர்களின் மன வேதனையைச் சொல்லும் "நீ வருவாய் என!"
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 14: தம்பிகள் மீது அண்ணன் கொண்ட பாசத்தை சொல்லும் "ஒரு கூட்டுக் கிளியாக"