Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்காக தமிழில் வெளியான 6 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகின் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவது ஆஸ்கர் விருது ஆகும். இந்த விருதை வெல்வது அவர்களின் வாழ்நாள் கெளரவமாக திரையுலகினர் கருதுகின்றனர். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கான போட்டிக்கு இந்தியா சார்பில் மொத்தம் 28 படங்கள் அனுப்பப்பட உள்ளது. இதில் மொத்தம் 6 தமிழ் படங்கள் ஆகும். மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான் ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு அனுப்பப்படுகிறது.
ஆஸ்கருக்கு செல்லும் 6 தமிழ் படங்கள்:
தெலுங்கில் இருந்து 3 படங்களும், மலையாளத்தில் இருந்து 4 படங்களும், ஒடியா மொழியில் இருந்து 1 படமும், இந்தியில் இருந்து 12 படங்களும், மராத்தியில் இருந்து 3 படங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் யாவும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள 6 தமிழ் படங்களும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தங்கலான், வாழை, கொட்டுக்காளி:
தங்கலான் படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் நெல்லையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆகும். மிக யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை தமிழ்நாடு முழுவதும் பெற்றது.
பல்வேறு நாட்டு திரைப்பட விழாக்களில் தேசிய விருதுகள் பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகாராஜா:
அழிந்து வரும் கிராமப்புற கலைகளில் ஒன்றான தெருக்கூத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ஜமா படம் ஆகும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ளார். வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது ஜமா படம்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனராக வெற்றிகரமாக உலா வரும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். எஸ்.ஜே.சூர்யா – ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் ஆகும்.
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மற்றொரு தமிழ் படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், சிங்கம்புலி, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாக அமைந்தது.