Goa Film Festival : கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்.. திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா?
53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
கடந்த 1952-ம் ஆண்டு முதல் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளின் கலை மற்றும் கலாச்சார மதிப்புகள் மற்றும் உயர் தொழில்நுட்ப தரம் கொண்ட திரைப்படங்களை திரையிட, ஒரு தளத்தை ஏற்படுத்தித் தருவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும், இத்தகைய திரையிடல்கள் பொதுவாக திரைப்படத்துறையின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு கலாச்சார பரிவர்த்தனையை ஊக்குவித்து, புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கின்றன. மேலும், பங்கேற்கும் நாடுகள் மற்றும் அந்த நாடுகளின் திரைத்துறையை இவை நெருக்கமாக்குகின்றன.
அந்த வகையில், மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில், கோவாவில் இன்று தொடங்கும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. குறிப்பாக இந்திய அளவில் சிறந்த கதை அம்சம் கொண்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விழாவில் ஒளிபரப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 20 திரைப்படங்கள் அல்லாத படங்கள் ஆகும்.
தமில் மொழியில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய்பீம், எஸ் கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா. வெங்கட் இயக்கிய கிடா ஆகிய படங்களில், சர்வதே திரைப்பட விழாவில் ஒளிபரப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் திரைப்படங்களாக வெளியானவற்றில், ஆர்.ஆர்.ஆர்., காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட படங்களும் ஒளிபரப்பப்பட உள்ளன. ஆஸ்கார் விருது பெற்ற காந்தி, அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் ஆகிய படங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில், ஆடியோ விளக்கங்கள் மற்றும் வசனங்களுடன் திரையிடப்படுகின்றன.
#IFFI53 is bigger and grander!
— International Film Festival of India (@IFFIGoa) November 19, 2022
We are all set to host you for the biggest film festival of Asia.
Register now: https://t.co/ChlTDdj0Cm#AmritMahotsav pic.twitter.com/gUPiad4UC3
அதோடு, திரைப்படக் கலை, சினிமா மற்றும் அழகியல் தொடர்பான தொழில்நுட்பத்தை பறைசாற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில், சமகால சினிமா தயாரிப்பில் தொழில்நுட்ப வல்லுநர்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. நாளை முதல் வரும் 27ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை, கோவா கலா அகாடமி அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கொண்டாடப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைக்க உள்ளார். இதில் இணை அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்க உள்ளார். பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளுடன், மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களின் வளாகங்கள், சரிவுகள், கைப்பிடிகள், தொட்டுணரக் கூடிய நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், மறுசீரமைக்கப்பட்ட கழிவறைகள், பிரெய்லி வழிகாட்டு பலகைகள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.