2025 ஆண்டு தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படங்கள்...4 கோடியில் குட் பேட் அக்லிக்கு பின்தங்கிய கூலி
Highest Grossing Movies in Tamilnadu : 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படங்களில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது

கமல் , ரஜினி என தமிழ் சினிமாவில் இரு முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளன. அதே நேரம் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் ஈட்டியுள்ளன. 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிகம் வசூலீட்டிய படங்களின் வரிசையைப் பார்க்கலாம்
குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 63 ஆவது படமாக உருவான குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகி அமோக வெற்றிபெற்றது. மற்ற தரப்பு ரசிகர்களை படம் பெரியளவில் கவரவில்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கிள் கொண்டாடி தீர்த்தனர். அஜித் நடித்த பல படங்களின் ரெஃபரஸ்களை வைத்தே படத்தை மிகப்பெரிய ஹிட் ஆக்கினார் ஆதிக். உலகளவில் ரூ 247 கோடி வரை வசூலித்தது. தமிழ்நாட்டில் இப்படம் ruu 152.65 கோடி வசூலித்து இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. படம் வெளியாவதற்கு முன் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூலிக்கும் படமாக கூலி சாதனை படைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். லோகேஷ் கனகராஜ் ரஜினி கூட்டணிக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. முதல் நான்கு நாட்களில் உலகளவில் ரூ 404 கோடி வசூலித்த கூலி நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சரிவை சந்தித்தது. தற்போது திரையரங்கில் ஓட்டம் முடிந்து வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கூலி திரைப்படம் இதுவரை ரூ 148.8 கோடி வசூலித்துள்ளது. குட் பேட் அக்லி படத்தைக் காட்டிலும் நான்கு கோடி குறைவாக கூலி வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது கூலி
விடாமுயற்சி / டிராகன்

விடாமுயற்சி மற்றும் டிராகன் ஆகிய இரு படங்களும் தமிழ்நாட்டில் ரூ 83 கோடி வசூலித்துள்ளன. பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் 37 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் ரூ 150 கோடி வசூலித்து மாபெரும் வெற்றிபெற்றது.
தலைவன் தலைவி

கடந்த ஆண்டு மகாராஜா ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு விஜய் சேதுபதிக்கு தலைவன் தலைவி படம் கமர்சியல் வெற்றியைக் கொடுத்தது. விஜய் சேதுபதி நித்யா மேனன் கூட்டணியில் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெயினராக உருவான இப்படம் உலகளவில் ரூ 100 கோடி வசூலை கடந்தது . தமிழ்நாட்டில் ரூ 64.75 கோடி இப்படம் வசூலித்துள்ளது
டூரிஸ்ட் ஃபேமிலி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் , சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமில் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று பார்த்த படம். 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ 87.87 கோடி வசூலித்தது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ 62.5 கோடி வசூலித்துள்ளது.




















