Vinoj P Selvam Profile : ”சேகர்பாபுவையே திணற வைத்தவர் - மத்திய சென்னையின் பாஜக வேட்பாளர்” யார் இந்த வினோஜ் பி செல்வம்..!
’தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட பலரும் தயங்கும் நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிப்பேன் என்று சொல்லியே பாஜக தலைமையிடம் சீட் வாங்கியிருக்கிறார் வினோஜ் பி செல்வம்’
மத்திய சென்னையின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம். 2021 சட்ட மன்ற தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்த நாள் முதல் 2024 நாடாளுமன்ற தேர்தலை நோக்கி காத்திருந்து, காய்நகர்த்திக்கொண்டிருந்தவருக்கு கை மேல் பலனாக, மத்திய சென்னையில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது பாஜக தலைமை.
'தயாநிதி மாறனை எதிர்க்கும் வினோஜ்’
முரசொலி மாறனுக்கு பின்னர், மத்திய சென்னை தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு 3 முறை எம்.பியாகியிருக்கும், பலம் வாய்ந்த திமுக வேட்பாளரான தயாநிதி மாறனை எதிர்த்து களம் காண்கிறார் வினோஜ் பி செல்வம். கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம், திமுக வேட்பாளர் சேகர் பாபுவிற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன் விளைவு, வாக்கு எண்ணிக்கையின்போது முதல் மூன்று ரவுண்டுகளில் சேகர்பாபுவையே திணறடித்தார். அவரை காட்டிலும் அதிக வாக்குகளை பெற்று திமுகவினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மத்திய சென்னையை குறி வைத்து பணி - வேட்பாளரான வினோஜ்
அந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த வினோஜ், தன்னுடைய துறைமுகம் தொகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதியான மத்திய சென்னையிலேயே பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். ஆனால், இந்த முறை அவர் எதிர்கொள்ளப்போவது சேகர்பாபுவை அல்ல தயாநிதிமாறனை. தயாநிதி மாறனை எதிர்த்து வெல்லக் கூடிய வேட்பாளராக வினோஜ் பி செல்வத்தை கருதி அவருக்கு அந்த தொகுதியை வழங்கியிருக்கிறது பாஜக.
நெல்லை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட வினோஜ் பி செல்வம், வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். அவருக்கு இளமையிலேயே அரசியல் ஆசை இருந்தது. அதனால், தன்னுடைய 21 வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்தார். 2007ல் தென் சென்னை மாவட்ட பாஜக இளைஞரணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே வேகத்தில் வளர்ந்து 2016ல் பாஜக மாநில இளைஞரணியின் தலைவராக ஆனார். இப்போது, பாஜக மாநில செயலாளர்களில் ஒருவராக இருக்கும் வினோஜ் பி செல்வத்தின் குடும்பத்திற்கு சொந்தமானதுதான் சென்னையில் உள்ள பிரபல ரோஹிணி திரையரங்கம்.
”அண்ணாமலையின் சென்னை தளபதி”
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு வினோஜ் பி செல்வத்திற்கான முக்கியத்துவம் கூடியது. திமுகவில் சென்னையை பொறுத்தவரை இப்போது மு.க.ஸ்டாலினுக்கு எப்படி அமைச்சர் மா.சுப்பிரமணியனும், சேகர்பாபுவும் தளபதிகளாக இருக்கின்றார்களோ அதே மாதிரி அண்ணாமலையின் சென்னை தளபதியாக இருப்பவர் வினோஜ் பி செல்வம். சமீபத்தில் அண்ணாமலை பாத யாத்திரைக்கு சென்னைக்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது மட்டுமில்லாமல், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தை முழுமையாக ஏற்பாடு செய்தது வினோஜ் பி செல்வம் தான். அந்த பொறுப்பை அண்ணாமலையே வினோஜிடம் ஒப்படைத்திருந்தார்.
அதனால்தான், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே மத்திய சென்னையில் தைரியமாக பணியை தொடங்கினார் வினோஜ் பி செல்வம். டோர் டூ டோர் என்ற பிரச்சார யுத்தியை பயன்படுத்தி ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி பாஜக பற்றி பிரச்சாரம் செய்து வந்தவர், சமீபத்தில் வெளிவந்த ஜெய் ஹனுமன் படத்தின் ஆயிரம் டிக்கெட்டுகளை இலவசமாக ஆயிரம் வீடுகளுக்கு சென்று கொடுத்தார்.
பலம் வாய்ந்த தயாநிதி மாறன் - எதிர்த்து களம் காணும் வினோஜ் பி செல்வம்
தென் சென்னையிலோ, வட சென்னையிலோ போட்டியிடும் திமுக வேட்பாளர்களான தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீரசாமி இவர்களையெல்லாம் பல மடங்கு அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவராகவும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவருமான தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒட்டுமொத்த திமுக எந்திரமே தயாநிதிமாறனுக்காக வேலை செய்யும் என்பது ஊர் அறிந்த விஷயம். அதனால்தான், அவரை எதிர்த்து போட்டியிட யாரும் பெரிதாக விரும்புவதில்லை.
ஆனால், வினோஜ் பி செல்வம், தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்டு வென்று காட்டுவேன் என்று சொல்லியே பாஜக தேசிய தலைமையிடம் பேசி தனக்கான சீட்டை வாங்கியிருக்கிறார். அவரின் வேகமும் செயல்பாடும் எந்த அளவிற்கு மத்திய சென்னையில் எடுபட போகிறது என்பதை தேர்தல் முடிவு காட்டிவிடும்.