‛பெரியாரின் பேரன்... அண்ணாவின் தம்பி... கலைஞரின் பிள்ளை... ஸ்டாலின் இருக்கும் வரை...’ திருச்சியில் திருமா பிரச்சாரம்!
trichy corporation election 2022 ‛தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், தமிழ்நாட்டை இபிஎஸ்-ஓபிஎஸ் ஆண்டிருக்க மாட்டார்கள்; எச்.ராஜா தான் ஆண்டிருப்பார்’
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திருச்சியில் பிரச்சாரம் செய்தார். 17வது வார்டில் அவர் பிரச்சாரம் செய்து பேசியதாவது:
‛‛தமிழ்நாட்டில் முக்கியமான கட்சிகள் எல்லாம் திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தோம். அதிமுக-பாஜக கூட்டணியோடு தேர்தலை சந்தித்தது. திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்ற ஆட்சியை கைப்பற்றியது. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என அரும்பாடு பட்ட கட்சி விசிக. தமிழ்நாடு முழுவதும் விசிக ஆதரவோடு திமுக ஆட்சியை கைப்பற்றியது. ஸ்டாலின் முதல்வராகி 8 மாதங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில், இந்தியாவில் தலைசிறந்த முதல்வர் ஸ்டாலின் தான் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியாரோடு பழகியவர், அண்ணா மடியில் வளர்ந்தவர், கருணாநிதியின் வார்ப்பாக இருந்தவர் ஸ்டாலின். படிப்படியாக பொறுப்பில் வந்து திமுக தலைவராகவும், முதல்வராகவும் உயர்ந்திருக்கிறது. அவரது தலைமையிலான கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் கட்டுக்கோப்பாக உள்ளது. எந்த கட்சியும் தனித்து போகவில்லை. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. அதிமுக நிலை என்ன? அதிமுக தனித்துப் போட்டி, பாஜக தனித்துப் போட்டி, பாமக தனித்துப்போட்டி. அந்த கட்சிகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை.
திமுக கூட்டணி சிதறவில்லை. அதிமுக கூட்டணி சிதறிவிட்டது. திமுக கொள்கை ரீதியான கூட்டணி. கொள்கைக்காக நாங்கள் கூடி நிற்கிறோம். அதிமுகவிற்கு நல்ல தலைமை இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் அந்த கட்சிக்கு உள்ளனர். பொதுச்செயலாளர் இல்லாத கட்சி அதிமுக. அதிமுகவிற்கே நல்ல தலைமை இல்லாத போது, அதிமுக கூட்டணிக்கு எப்படி தலைமை இருக்கும். தேர்தல் அறிவித்த மறுநாளே பாஜக கூட்டணி முறிந்தது. பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை.
பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் தமிழ்நாட்டை குறிவைத்து ஆக்கிரமிக்க பார்க்கிறது. அதனால், நாங்கள் ஒற்றுமையுடன் அதை எதிர்க்க கூட்டணியாக உள்ளோம். திருச்சி மாநகராட்சியை திமுக மற்றும் திமுக கூட்டணிகள் கைப்பற்றும். அனைத்து வார்டுகளிலும் நாம் வெற்றி பெறுவோம். இது கவுன்சிலர் தேர்தல் தானே, சட்டமன்றத்தில் திமுகவுக்கு ஓட்டு போட்டோமே... இப்போ நம்ம ஊர்க்காரன், நம்ம ஜாதிக்காரன். நம்ம மதக்காரன் என யாருக்காவது ஓட்டு போட்டுவிடாதீர்கள். ஒரு கப்பல் மூழ்க சிறு ஓட்டை போதும். அதை மனதில் வைத்து ஓட்டு போடுங்க.
பாஜக சராசரி அரசியல் கட்சி கிடையாது. அவங்களுக்கு பெரிய செயல் திட்டம் இருக்கு. அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற செயல்திட்டத்துடன் செயல்படுகிறது பாஜக. இந்தியர்களை இரண்டாக பிரித்து, இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நாட்டை இரு பிரிவாக பிரிக்கிறது பாஜக. ஹிஜாப் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது. மாணவர்களிடத்தில் அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு முதல்வர் லேப்டாப் வழங்குகிறார்; அங்கு காவி துண்டு தருகிறார்கள். யோசித்து பாருங்கள். நமது செயல்திட்டத்திற்கும், அவர்கள் செயல்திட்டத்திற்கு உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.
ஒவ்வொவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கு. நாம் நட்புடன் தான் பழகுகிறோம். அதை சிதைக்க வேண்டும்; நம்மை பிரிக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம். இந்தியர்களை இந்துக்காளாக பிரித்து, இந்துவை மேல்சாதி, கீழ் சாதி என பிரிக்கிறார்கள். அவர்களால் உபியை கைப்பற்ற முடிகிறது, கேரளாவை, ஆந்திராவை அசைத்து பார்க்க முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஏனென்றால் பெரியாரின் பேரன், அண்ணாவின் தம்பி, கலைஞரின் பிள்ளை ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அவர் இருப்பதால் இங்கு பாஜகவால் வேரூன்ற முடியவில்லை. திமுகவை வீழ்த்திவிட்டால், பெரியாரை பேச இங்கு யாரும் இல்லை என்று பாஜக நினைக்கிறது. தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், தமிழ்நாட்டை இபிஎஸ்-ஓபிஎஸ் ஆண்டிருக்க மாட்டார்கள்; எச்.ராஜா தான் ஆண்டிருப்பார். இன்று எச்.ராஜாவால் பேச முடியுமா? வாலை ஒட்ட நறுக்கிவிடுவார் ஸ்டாலின்,’’ என்று திருமாளவன் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்