நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி..
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக, அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 498 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பாக ஏற்கனவேஇரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரச்சாரம் செய்யயக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பரப்புரை நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக மேற்கொள்ளப்படும் சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரைகள், சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு அளிக்கப்படுகிறது. மாதிரி நடத்தை விதிகளில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய அலுவலரிடம் அனுமதி பெற்று மேற்கண்ட நிகழ்வுகளை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர்கள்/ மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆணையர், சென்னை மாநகராட்சி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலை பெற்று பிரச்சாரம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பரப்புரையின்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கடந்த மாதம் 28-ந் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. பிப்ரவரி 4-ந் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகவும் சென்று பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்