Local Body Election | விழுப்புரத்தில் 210 பதவியிடங்களுக்கு 1,301 பேர் வேட்பு மனு தாக்கல்
’’நேற்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவியிடங்களுக்கு 1,301 பேர் வேட்பு மனு தாக்கல்’’
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகளில் 102 நகரமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் 108 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 210 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலகங்களான நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனுதாக்கல் செய்ய அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தங்கள் ஆதரவாளர்களுடன் மேள, தாளத்துடன் பட்டாசு வெடித்தும், ஊர்வலமாக சென்று உற்சாகத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 707 பேரும், 7 பேரூராட்சிகளின் 108 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 594 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் விழுப்புரம் நகராட்சியில் 42 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 308 பேரும், திண்டிவனம் நகராட்சியில் 33 நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு 238 பேரும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு 161 பேரும், வளவனூர் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 55 பேரும், விக்கிரவாண்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 70 பேரும், செஞ்சி பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர் பதவிக்கு 136 பேரும், மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர் பதவிக்கு 137 பேரும், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 81 பேரும், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் 12 வார்டு உறுப்பினர் பதவிக்கு 49 பேரும், அனந்தபுரம் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 66 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் மாவட்டத்தில் 210 பதவியிடங்களுக்கு மொத்தம் 1,301 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. வார்டு வாரியாக இந்த பணிகள் நடைபெறும். அப்போது வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் என யாராவது ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலையே, தேர்தலில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும்.