Paramakudi Municipality: 53 ஆண்டுகள் அதிமுகவின் கோட்டை... பரமக்குடி நகராட்சியை அடித்து தூக்கிய திமுக!
53 ஆண்டுகள் அதிமுகவின் கோட்டையாக இருந்த பரமக்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
53 ஆண்டுகள் அதிமுகவின் கோட்டையாக இருந்த பரமக்குடி நகராட்சியை கைப்பற்றியிருக்கிறது திமுக. அதுமட்டுமல்லாமல் ராமநாதபுரத்தை மொத்தமாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது திமுக. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பொறுப்பு அமைச்சராக திமுக நியமனம் செய்திருந்த நிலையில் இந்த அபார வெற்றி திமுகவிற்கு சாத்தியமாகியுள்ளது.
கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் நகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.கே.ஜி.சேகரும், இடைத்தேர்தலில் அவரது மனைவி சந்தானலட்சுமி வெற்றி பெற்றனர்.பரமக்குடி நகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த கீர்த்திகா முனியசாமி, கீழக்கரை நகராட்சியில் ராவியத்துல் கதரியா, ராமேஸ்வரம் நகராட்சியில் அர்ச்சுணன் ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர். அதோடு, முதுகுளத்தூர் தவிர சட்டமன்றத் தொகுதிகளையும் அதிமுகவே தன் வசம் வைத்திருந்தது. இதை கடந்த சட்டமன்றத் தேர்தலில் உடைத்து அனைத்தையும் கைப்பற்றியது திமுக.
இந்த நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது திமுக. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகளும், அபிராமம், கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சாயல்குடி மற்றும் தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டுள்ளது.
நேற்று வெளியான வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 4 நகராட்சிகளையும், 4 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதே சமயத்தில் 3 பேரூராட்சிகளை சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
மொத்தம் 21 வார்டுகள் கொண்ட ராமேஸ்வரம் நகராட்சியில் 16 வார்டுகளையும், 21 வார்டுகள் கொண்ட கீழக்கரை நகராட்சியை திமுக கூட்டணி 14 இடங்களையும், பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் திமுக கூட்டணி 22 இடங்களையும், ராமநாதபுரம் நகராட்சியில் திமுக கூட்டணி 27 இடங்களை கைப்பற்றியுள்ளது.
பேரூராட்சியை பொருத்தவரை ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 13 இடங்களையும், மண்டபம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுகவும், தொண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களையும், 15 வார்டுகள் கொண்ட அபிராமம் பேரூராட்சியில் தி.மு.க கூட்டணி 13 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கிறது. சாயல்குடி, கமுதி முதுகுளத்தூர் ஆகிய 3 பேரூராட்சிகளை சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்
அதிமுகவிற்கு வலுவான அடித்தளம் கொண்ட மாவட்டமாக பார்க்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியிருக்கிறது திமுக கூட்டணி. இந்த வெற்றிகள் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு பரமக்குடி நகராட்சியும், 25 ஆண்டுகளுக்கு பின்பு மண்டபம் பேரூராட்சியும் திமுக வசம் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்