BJP Election Result: தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சி பாஜக என்பது சரியானதா? அண்ணாமலை சொல்வது உண்மையா?
அந்த வகையில் பார்த்தால் பாஜக பெற்றிருக்கும் வெற்றி ஒப்பீட்டளவில் கடந்த தேர்தலைவிட குறைவானதே. அதோடு கடந்த 11 ஆண்டுகளில் பாஜகவின் வளர்ச்சி 1 சதவீதம்தான் இருந்திருக்கிறது.
![BJP Election Result: தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சி பாஜக என்பது சரியானதா? அண்ணாமலை சொல்வது உண்மையா? TN urban local body election 2022 result is BJP 3rd big party tamil nadu next to DMK AIDMK as Annamalai says Know Details BJP Election Result: தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சி பாஜக என்பது சரியானதா? அண்ணாமலை சொல்வது உண்மையா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/0baf30b7c9a28e911f34a990acb4c8ea_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திமுக அபார வெற்றியையும், அதிமுக அதிர்ச்சி தோல்வியையும் சந்தித்திருக்கின்றது. இந்த வெற்றியால் குதூகலத்தில் இருக்கின்றன திமுகவின் கூட்டணிக்கட்சிகள். இவர்கள் மட்டுமல்லாது மற்றொரு கட்சியும் குதூகலத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த கட்சி என்றைக்கும் வளர முடியாது. நோட்டாவோடு போட்டிபோடும் கட்சி என்று பலவிதங்களில் விமர்சனம் செய்யப்பட்ட பாரதிய ஜனதாகட்சி தான் அது. உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் திமுக, அதிமுகவிற்கு அடுத்து தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அதிகாரப்பூர்வமாக உருவெடுத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் பாஜக மாநில தலைவர்.
உண்மையில் இந்த தேர்தல் வெற்றியின் மூலம் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறதா? எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறது என்று பார்க்கலாம். முதலில் 2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை எடுத்துக்கொள்ளலாம். அப்போது 10 மேயர், 820 மாநகராட்சி கவுன்சிலர்கள், 125 நகராட்சி தலைவர், 3,697 நகராட்சி கவுன்சிலர்கள், 529 பேரூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இப்பேரூராட்சிகளிலுள்ள 8,303 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கானத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 4 மாநகராட்சி உறுப்பினர்களையும், 2 நகராட்சித் தலைவர் பதவியையும், 37 நகராட்சி உறுப்பினர் பதவியையும், 13 பேரூராட்சித் தலைவர் பதவியையும், 185 பேரூராட்சி உறுப்பினர் பதவிகளையும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை பார்த்தால் மாநகராட்சி வார்டு தேர்தலில் 0.49%, நகராட்சித் தலைவர் தேர்தலில் 1.60%, நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1%, பேரூராட்சித் தலைவர் தேர்தலில் 2.46%, பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 2.23% இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.
தற்போது நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை 22 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 56 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 230 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. பெற்றுள்ளது. ஆனால், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் என்று எந்த முக்கிய பதவிகளையும் கைப்பற்றும் அளவிற்கான இடங்களை பாஜக பெறவில்லை. 1373 மாநகராட்சி வார்டுகளில் 22 இடங்களையும், 3842 நகராட்சி வார்டுகளில் 56 இடங்களையும், 7603 பேரூராட்சி வார்டுகளில் 230 வார்டுகளையும் பெற்றிருக்கிறது. சதவீத அடிப்படையில் பார்த்தால் மாநகராட்சி வார்டு உறுப்பினராக 1.60% இடங்களையும், நகராட்சி வார்டு உறுப்பினராக 1.46% இடங்களையும், பேரூராட்சி வார்டு உறுப்பினராக 3.02% இடங்களையும் பெற்றுள்ளது பாஜக.
கடந்த 2011 தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மாநகராட்சி வார்டில் சுமார் 1 சதவீதமும், நகராட்சி வார்டில் 0.46%, பேரூராட்சி வார்டில் 1 சதவீதமும் கூடுதலாகப் பெற்றிருக்கிறது பாஜக. அதுமட்டுமில்லாமல், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில், இந்த முறை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் அதிகமாகியிருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் பாஜக பெற்றிருக்கும் வெற்றி ஒப்பீட்டளவில் கடந்த தேர்தலைவிட குறைவானதே. அதோடு கடந்த 11 ஆண்டுகளில் பாஜகவின் வளர்ச்சி 1 சதவீதம் தான் இருந்திருக்கிறது.
அதோடு பாஜக வெற்றிபெற்ற 308 இடங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் 11 மாநகராட்சி, 21 நகராட்சி, 168 பேரூராட்சி இடங்கள் என்று சுமார் 200 இடங்களை மொத்தமாக கைப்பற்றியிருக்கிறது. சொல்லப்போனால் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தர்மபுரி, திருச்சி, திருவள்ளூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. ஆக இந்த வெற்றியை ஒட்டுமொத்த மாநிலத்திற்குமான வளர்ச்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், காங்கிரஸோ, 73 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 151 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 368 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. சதவீத அடிப்படையில் பார்த்தால் 5.31% மாநகராட்சி வார்டு உறுப்பினர், 3.93% நகராட்சி வார்டு உறுப்பினர், 4.83% பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. அதோடு, கன்னியாகுமரியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பாலான இடங்களில் தனித்தேப் போட்டியிட்டிருக்கின்றனர்.
ஒப்பீட்டளவில் பாஜகவை காட்டிலும் காங்கிரஸே அதிக இடங்களில் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதோடு, அதிக இடங்களில் போட்டியிட்ட பாஜகவை விட, குறைவான இடங்களில் போட்டியிட்டு காங்கிரஸ் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனித்து நின்றதால் இந்த வெற்றி. காங்கிரஸ் கூட்டணி வைத்து வெற்றிபெற்றது என்ற வாதத்தை வைத்தால், 11 ஆண்டுகளில் பெற்றிருக்கும் 1% வளர்ச்சி உண்மையான வளர்ச்சியா என்பதை பாஜக தான் சீராய்வு செய்து பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)