Urban Localbody Election | வேட்புமனுத் தாக்கலின் போது விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் மீது புகார்
தேர்தல் விதிகளை மீறி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் தலைமையில் 3 கார்களில் வந்து திமுகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல்
திருவண்ணாமலை நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடத்தில் இருந்து, 100 மீட்டர் முன்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் முன்புபாக தடுப்புகளை வைத்து காவல்துறையினர் , கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களை மட்டும் காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். காரில் வரும் வேட்பாளர்கள் அவர்களுக்கு முன்மொழி வருபவர்களை, நுழைவு வாயிலில்தடுத்து நிறுத்தி, தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி கார்களை அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் கறாராக கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி நகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் தங்களுடைய அடையாள அட்டை காண்பித்த பிறகே இரு சக்கர வாகனங்களில் உள்ளே செல்ல காவல்துறையினர் அனுதிக்கப்படுகின்றனர். அதனைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் மாநில திமுக மருத்துவரணி துணைத் தலைவருமான கம்பன் 39-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வே.நிர்மலா கம்பன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் மற்றும் முன்மொழிவர்கள் என 3 நபர்கள் அல்லது 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆனால் கம்பன், நிர்வாகிகள் மற்றும் திமுக வேட்பாளர் ஆகியோர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி 3 கார்களில் வந்தனர். அவர்களது கார்கள் வருவதை பார்த்ததும், நகராட்சி நுழைவு வாயில் முன்பு இருந்த தடுப்புகளை காவல்துறையினர் வேகமாக தடுப்புகளை அகற்றினர்.
இதனால், அவர்களது 3 கார்களும், நகராட்சி அலுவலகம் முன்பு வரையில் தடையின்றி சென்றனர். பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ததும் கார்களில் திமுகவினர் புறப்பட்டு சென்றனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி நகராட்சி அலுவலகம் உள்ளே வரை வேட்பாளர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் ஆகியோர் கார்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. 100 மீட்டர் இடைவெளியில் கோடுகள் அமைத்துள்ளது. அவர்களுடைய வாகனங்கள் மற்றும் அவருடன் வரும் ஆதரவாளர்கள் அங்கேயே நிறுத்தி விட்டு வர வேண்டும். இது தொடர்பாக காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் 3 கார்களை உள்ளே அனுமதித் துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி 3 கார்களை காவல்துறையினர் அனுமதித்துள்ளது தவறாகும்' என்றார்.