Assembly Elections 2021 | IPAC-இல் இருந்து விலகுகிறாரா பிரஷாந்த் கிஷோர்?
திமுகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் அரசியல் செயல்திட்ட ஆலோசகராக இருந்த IPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் தான் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
ஐந்து மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான வாக்கு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை கம்யூனிஸ்ட்டும் திரிணமூல் காங்கிரஸும் முறையே ஆட்சியைத் தக்கவைத்துள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 13 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. கேரளாவில் 93 இடங்களில் கம்யூனிஸ்ட் முன்னிலையில் உள்ளது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 212 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் திமுகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் அரசியல் செயல்திட்ட ஆலோசகராக இருந்த ஐ-பேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் தான் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் பெருவாரியான வெற்றி அறிவிப்பை அடுத்து அவருடைய இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரஷாந்த் கிஷோர், ‘நான் இதிலிருந்து(ஐ-பேக்) விலகப்போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், ”திரிணாமுல் காங்கிரஸும் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது.. ஆனால் எனக்கு இடைவேளை தேவை. அதனால் இந்தப் பொறுப்பை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடலாம் என்று இருக்கிறேன். என்னால் இந்த வேலையை இனிமேல் செய்யமுடியாது” எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திரிணாமுல் மற்றும் திமுகவின் வெற்றிக்காக இரண்டு மாநில மக்களும் அவரை பாராட்டிவரும் நிலையில் அவரது இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.