விஷம்போலக் கொட்டும் விலைவாசி உயர்வு; வேலையில்லாமல் 83% இளைஞர்கள்- பட்டியலிட்ட ப.சிதம்பரம்
ஸ்டாலின் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இது ஏன் பிரதமருக்குத் தோன்றவில்லை?
![விஷம்போலக் கொட்டும் விலைவாசி உயர்வு; வேலையில்லாமல் 83% இளைஞர்கள்- பட்டியலிட்ட ப.சிதம்பரம் P Chidambaram campaining Tamizhachi Thangapandian in Sounth Chennai Mylapore DMK Lok Sabha Election 2024 விஷம்போலக் கொட்டும் விலைவாசி உயர்வு; வேலையில்லாமல் 83% இளைஞர்கள்- பட்டியலிட்ட ப.சிதம்பரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/22/08f9d284adecc03b1f77114b4e800c2a1703263256399911_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர் காமராஜருக்குக் கிடைத்த புகழ் முதல்வர் ஸ்டாலினுக்குக் கிடைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 15 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 39 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் அனல் தெறிக்க நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மைலாப்பூர் பகுதியில் பரப்புரை செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
’’பாஜக அரசு மக்களுக்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் 3ஆவது முறையாகப் பிரதமராக வாய்ப்பு தாருங்கள் என்கிறார் மோடி.
எந்தக் காலத்திலும் இல்லாத அளவு உயர்ந்த வேலையின்மை
உலகிலேயே மிகப்பெரிய மக்கள் தொகை இருக்கும் இடத்தில், 4 முதல் 5% வளர்ச்சி இருந்தாலே முன்னேற்றம் என்பது தானாகவே நடக்கும். அதுதான் பாஜக ஆட்சிக் காலத்திலும் நடந்துள்ளது.
ஆனால் தனிநபர் வருமானத்தில் உலக அளவில் 120ஆவது இடத்தில்தான் இருக்கின்றோம். பாஜக ஆட்சியில் வேலையின்மை எந்தக் காலத்திலும் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. 35 சதவீதமாக இருந்த வேலையின்மை, 65 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நாட்டில் 83 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை. விலைவாசி உயர்வு விஷம் போலக் கொட்டுகிறது.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு செய்யப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதி என்ன ஆனது? பாஜகவினர் 10 ஆண்டுகளில் முத்தான திட்டங்கள் என்ன செய்தீர்கள்? ஆனால் 3 ஆண்டுகளில் நாங்கள் (திமுக அரசு) என்னென்ன செய்திருக்கிறோம் தெரியுமா?
* 1.15 கோடி மகளிருக்கு மாதாமாதம் உரிமைத் தொகை
* நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்- கூண்டுக் கிளிகளுக்கு சிறகு அளிக்கப்பட்டிருக்கிறது.
* நம் பெண்களும் ஆட்சியராக புதுமைப் பெண் திட்டம். இந்த வகையில் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 தொகை அளிக்கப்படுகிறது.
இது ஏன் பிரதமருக்குத் தோன்றவில்லை?
* காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்ததைப்போல, ஸ்டாலின் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இது ஏன் பிரதமருக்குத் தோன்றவில்லை? எழுதி வைத்துக்கொள்ளுங்கள், காலைச் சிற்றுண்டித் திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும். அவ்வாறு காமராஜருக்குக் கிடைத்த புகழ் ஸ்டாலினுக்குக் கிடைக்கும்.
இப்படி திமுக அரசின் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தென் சென்னை மக்கள் படித்தவர்கள். சிந்தித்து முடிவு செய்பவர்கள். அதனால், ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால், மக்கள் அனைவரும் அலசிப் பார்த்து மக்களவைத் தேர்தலில் வாக்களியுங்கள்’’.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)