(Source: ECI/ABP News/ABP Majha)
நீட் விவாதத்திற்கு ஸ்டாலின் துண்டுச்சீட்டு இல்லாமல் வரவேண்டும் - எடப்பாடி பழனிசாமி சவால்
’’எனது இல்லத்தில் என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் ஸ்டாலினை, அந்த கட்சியின் எம்.எல்.ஏ கூட, அவரின் வீட்டு கேட்டை கூட தொடமுடியாது’’
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது, மக்களின் பிரச்சனையை தீர்க்கும் முக்கியமான தேர்தல் உள்ளாட்சி தேர்தல். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று வாக்கு சேகரித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்து இருந்த நிலையில், மக்களை காப்பாற்றிய அரசு, அதிமுக அரசு தான். ஒன்பது மாத காலம் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கினோம். ஏழு மாத காலம் அம்மா உணவகத்தில் நாள்தோறும் ஏழு லட்சம் பேருக்கு விலையில்லா உணவு வழங்கினோம் என்றும் கூறினார்.
இந்த பகுதியில் இருக்கும் மக்கள் எப்போது நினைத்தாலும் 20 நிமிடங்களில், நெடுஞ்சாலை நகரில் உள்ள எனது இல்லத்தில் என்னை சந்திக்கலாம். ஆனால் ஸ்டாலினை, அந்த கட்சியின் எம்.எல்.ஏ கூட, அவரின் வீட்டு கேட்டை கூட தொட முடியாது. முதலமைச்சர் என்பவர் 234 தொகுதிகளிலும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்றார். திமுகவினர் பணம் கொடுத்த வரலாறு கிடையாது. பணத்தை எடுத்து தான் பழக்கம். திமுகவின் இனிவரும் நான்கு ஆண்டு ஆட்சியில் பட்டை நாமம் தான். திமுக 500 கோடி ரூபாய் சுருட்டுவதற்காகவே, பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டது என்று கூறினார். முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு தயார். ஸ்டாலின் துண்டுசீட்டு இல்லாமல் வரவேண்டும் சவால் விடுத்தார்.
நான் பெற்ற பிள்ளைகளுக்கு ஸ்டாலின் பெயர் வைத்து வருகிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு முடிக்கப்பட்ட திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். இதை தொடர்ந்து பேசிய அவர், திமுகவைப் பொறுத்தவரை வாரிசு அரசியல் செய்து வருகிறார்கள். தந்தை அடுத்து மகன் அரசியலுக்கு வந்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பம் என்ன ராஜபரம்பரையா அவர்களுக்கு மட்டும் பட்டா போட்டு வைத்துள்ளனரா என்று விமர்சனம் செய்தார்.
திமுக ஆட்சியில் உள்ள தொண்டர்கள் யாரையும் முன்னேற விடமாட்டார்கள். அதிமுகவினால் அடையாளம் காணப்பட்ட அமைச்சர்கள் விசுவாசம் இல்லாமல் திமுகவிற்கு சென்று தற்போது 8 அமைச்சர்களாக உள்ளனர். திமுகவில் உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் வர முடியும் என்று பேசினார். பணம் கொடுத்து, ஆசை வார்த்தை கூறி, மிரட்டி வாபஸ் வாங்க வைத்து கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்காக தேர்தல். மக்களின் தீர்ப்பை எப்போதும் அதிமுக ஏற்கும். ஆனால், திமுக அடாவடி செய்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.