DMK Black Flag Protest: தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்- அறிவித்த முதல்வர் ஸ்டாலின்- எதற்கு?
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்- முதல்வர் ஸ்டாலின்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை (ஏப்.16) நடக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக, தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின், தலைமையில் இன்று காலை திமுக எம்.பி.க்கள் அவசரக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் இந்த சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், எம்.பி.க்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதேபோல காணொலி மூலம் மாவட்டச் செயலாளர்களின் கூட்டமும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை சிறப்புக் கூட்டத்தொடர்
நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் சாசனத் திருத்தத்தைக் கொண்டு வர நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை (ஏப்ரல் 16) கூடுகிறது. இதில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
மாபெரும் வரலாற்று அநீதி
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!’’ என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















