Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Ather Konarc Electric Scooter: ஏதர் நிறுவனம் தனது கோனார்க் எனும் புதிய மின்சார ஸ்கூட்டரை, வரும் ஆகஸ்ட் 29ம் தேதி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

Ather Konarc Electric Scooter: ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டரான கோனார்க் உள்ளூர் சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேடக் போன்ற மாடல்களுடன் போட்டியிட உள்ளது.
ஏதர் கோனார்க் மின்சார ஸ்கூட்டர்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏதர் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மின்சார ஸ்கூட்டரான கோனார்க், வரும் ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற உள்ள ப்ராண்டின் கம்யூனிட்டி த்ன கொண்டாட்டத்தின் போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான உற்பத்தி ஏற்கனவே தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பிடத்தக்க அம்சமாக ப்ராண்டின் EL ப்ளாட்ஃபார்மில் உருவாகும் முதல் மாடல் இதுவாகும். பட்ஜெட்டை கருத்தில் கொண்டு குடும்ப பயன்பாட்டாளர்களுக்காக இந்த மின்சார ஸ்கூட்டர் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஏதர் கோனார்க் - அம்சங்கள், வசதிகள்
கோனார்க்கின் வெளிப்புற தோற்றத்தை காட்சிப்படுத்தும் விதமாக சில்-அவுட் டீசர் ஒன்றை ஏதர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் வாயிலாக வாகனமானது முன்புறத்தில் ஒளிரூட்டப்பட்ட ஏதர் ப்ராண்டிங்குடன் முழு அகலத்திற்கான பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், செங்குத்தாக செதுக்கப்பட்ட முன்புற ஏப்ரான் மற்றும் ஹேண்டில் பாரில் பொருத்தப்பட்ட முகப்பு விளக்கு ஆகியவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோக நீளமான ஒற்றை இருக்கை, அலாய் வீல்கள், முன்புற டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் மெல்லிய எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகிய வசதிகள் இருப்பதையும் டீசர் வெளிக்காட்டியுள்ளது. புதிய மாடலின் மூலம் ஏதர் நிறுவனம் தனது ஸ்கூட்டருக்கு முதல்முறையாக மெடல் பாடி பேனல்களை பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
டீசரின் அடிப்படையில் ஏதர் கோனார்க்கானது 2025ம் ஆண்டில் பிராண்டின் கம்யூனிட்டி டே-வில் காட்சிப்படுத்தப்பட்ட EL01 கான்செப்ட்டிலிருந்து அதன் வடிவமைப்பு உத்வேகத்தைப் பெற்றிருப்பதை உணர முடிகிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த புதிய ஏதர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் கூடிய 7-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 14-இன்ச் முன்பக்க மற்றும் 12-இன்ச் அலாய் வீல்கள், மற்றும் ஸ்விங்ஆர்மில் பொருத்தப்பட்ட ஒரு புதிய மோட்டார் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏதர் கோனார்க் - பேட்டரி, ரேஞ்ச்
கடந்த ஆண்டு நடைபெற்ற கம்யூனிட்டி டே கொண்டாட்டத்தில் தனது முற்றிலும் புதிய EL ப்ளாட்ஃபார்மின் சில தொழில்நுட்ப விவரங்களை ஏதர் நிறுவனம் பகிர்ந்துகொண்டது. அதன்படி இந்த ஸ்கூட்டரில் 2kWh முதல் 5kWh வரையிலான கொள்ளளவு கொண்ட பேட்டரி பேக் இடம்பெற முடியும். கோனார்க்கின் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 100 முதல் 120 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏதர் கோனார்க் - விலை, போட்டியாளர்கள்
ஏதர் கோனார்க் மின்சார ஸ்கூட்டர், குடும்ப பயன்பாட்டிற்கான மின்சார ஸ்கூட்டரை எதிர்பார்க்கும் நபர்களை கவரும் வகையில் போட்டி விலையில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 1 லட்சம் ரூபாயில் தொடங்கி, (எக்ஸ்-ஷோரூம்) ரூ. 1.25 லட்சம் வரை நீளக்கூடும். இதன் ஆரம்பக்கட்ட உரிமையாளர் செலவைக் குறைப்பதற்காக, ஏதர் எனர்ஜி நிறுவனம் பேட்டரியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் (BaaS) சந்தா மாதிரியுடன் அறிமுகப்படுத்தக்கூடும். ஆகஸ்ட் 29ம் தேதி அறிமுகப்படுத்தலை தொடர்ந்து 2026 தீபாவளிப் பண்டிகையை ஒட்டி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேடக் போன்ற போட்டியாளர்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதான பயணிகள் மின்சார ஸ்கூட்டர் பிரிவில் கோனார்க் உறுதியாக இடம்பிடிக்கும்.
ட்ரெண்டிங் செய்திகள்























