PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
PM Modi: சிறுபான்மையினருக்கு எதிராக தான் ஒருபோதும் பேசியதில்லை என, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
PM Modi: காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியலை மட்டுமே தான் விமர்சிப்பதாக, பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதில்லை - மோடி:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 49 தொகுதிகளில் 5ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் ஒரு அங்கமாக பிரதமர் மோடி பல்வேறு ஊடகங்களுக்கும் பிரத்யேக பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தான் ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
”சிறப்பு குடிமக்கள் என யாரும் இல்லை”
தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகவும், மக்களை பிளவுபடுத்தும் விதமாகவும் பிரதமர் மோடி பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பான கேள்விக்கு, “தான் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை, பாஜக அவர்களுக்கு எதிராக இன்று மட்டுமல்ல ஒருபோதும் செயல்படவில்லை. அதேநேரம், யாரையும் சிறப்புக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக மட்டுமே பேசுகிறேன். அரசியல் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது, அதைத்தான் நான் கூறி வருகிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பை மீறும் காங்கிரஸ் - மோடி
தொடர்ந்து, அரசியலமைப்பின் மதச்சார்பற்ற உணர்வை காங்கிரஸ் தொடர்ந்து மீறுகிறது. வாக்கு வங்கி அரசியல் நோக்கத்துடன், சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை அம்பலப்படுத்துவதே எனது பரப்புரையின் நோக்கம். அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், மத அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லை என கூறியுள்ளனர். நீங்கள் அதிலிருந்து விலகிச் செல்கிறீர்கள். உங்களை அம்பலப்படுத்துவது எனது பொறுப்பு. அப்போது அரசியலமைப்புச் சபையில் எனது கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லை. நாடு முழுவதிலும் உள்ள பிரபலங்களின் பேரவையாக அது இருந்தது” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சிறுபான்மையினரை குறிவைக்கவில்லையா?
தேர்தல் பரப்புரைகளில் தங்களது பேச்சு சிறுபான்மையினரை குறிவைக்கவில்லையா என்ற கேள்விக்கு, “பாஜக ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்ததில்லை. இன்று மட்டுமல்ல, ஒருபோதும் இல்லை. நாங்கள் சர்வ தர்ம சம்பவத்தை நம்புகிறோம். அனைவரையும் எங்களுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறோம்” என பிரதமர் பதிலளித்துள்ளார்.
”தென்னிந்தியாவில் பாஜக”
தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். தென்னிந்தியாவில் நாங்கள் தனிப்பெரும் கட்சியாகவும், கடந்த முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்போம் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 543 மக்களவைத் தொகுதிகளில் தென்னிந்தியாவில் 131 இடங்கள் உள்ளன. கடந்த தேர்தலின்படி, கர்நாடகாவில் இருந்து ஒரு சுயேச்சை ஆதரவு உட்பட, பாஜகவுக்கு 29 எம்.பிக்கள் உள்ளனர்.