Nitish Kumar: "எப்போதும் பிரதமர் மோடியின் பக்கம்தான் இருப்பேன்" அடித்து கூறும் நிதிஷ்குமார்!
பிரதமர் மோடியின் பக்கம்தான் எப்போதும் இருப்பேன் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவுடன் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். 300க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க.வே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே 290 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
எப்போதும் மோடியின் பக்கம்தான்:
இந்த நிலையில், ஆட்சியை தக்க வைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவு கட்டாயம் என்ற சூழலில், அவர்களை தங்கள் கூட்டணியில் பா.ஜ.க. தக்க வைத்தது, இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், “நான் எப்போதும் பிரதமர் மோடியின் பக்கம்தான் நிற்கிறேன். இந்தியா கூட்டணி நாட்டிற்கு அர்த்தம் உள்ள வகையில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. எங்கள் கட்சி ஜனதா தளம் நரேந்திர மோடி பிரதமராவதற்கு உறுதுணையாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மீண்டும் பிரதமர் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி நாட்டுக்கு சேவை செய்தவர்.”
இவ்வாறு அவர் பேசினார்.
மோடி ஆட்சியமைக்க நிதிஷின் பங்கு:
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைமக்க காத்திருந்த பா.ஜ.க. கூட்டணிக்கு இந்தியா கூட்டணி இந்த தேர்தலில் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த தேர்தலில் தங்கள் வசம் இருந்த 60 தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது. இதனால், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவு கட்டாயம் பா.ஜ.க.விற்கு தேவைப்பட்டது.
பீகாரில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கும்? என்று பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தியா கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், அதன்பின்பு யாரும் எதிர்பாராத வகையில் அவர் பா.ஜ.க.கூட்டணிக்கு தாவினார்.
அங்கு ஏற்கனவே லாலு பிரசாத் யாதவின் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்க முக்கிய பங்கு வகிக்கும் நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவி அளிக்கப்படுமா? சந்திரபாபு நாயுடுவின் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கு சபாநாயகர் பதவி அளிக்கப்படுமா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 3-வது முறை பிரதமராகும் மோடி! குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக கூட்டணி!
மேலும் படிக்க: TN Headlines: நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய முக்கியச் செய்திகள்