AIADMK-BJP Alliance: அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அச்சாரமே அண்ணாமலைதான் - எஸ்.பி. வேலுமணி ஓபன் டாக்..!
பாஜக, அதிமுக கூட்டணி இருந்திருந்தால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10 சீட் பெற வாய்ப்பு இருந்தது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டியளித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி பிரிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அண்ணாமலை பாஜக தலைவரான பிறகுதான் கூட்டணிக்குள் பிரச்சனை வந்தது என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. அதில், மத்தியில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவினாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40க்கு 40 என்ற அடிப்படையில் ஒரு தலைபட்சமாக வெற்றிபெற்று அசத்தியது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பார்க்கப்படும் மற்றொரு கட்சியான அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம். மேலும், அதிமுக தென் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
இந்தநிலையில், வெளியான மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிமுகவினர் இந்த தோல்வியை படிப்பினையாக எடுத்து கொள்வோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ பாஜக கூட்டணியில் இருந்தபோது அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகமாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அதிகமாக பேசியது அண்ணாமலைதான்.
முன்னதாக, தமிழ்நாட்டில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்த போது அதிமுக - பாஜக கூட்டணி சுமுகமாக இருந்தது. ஆனால், அண்ணாமலை பாஜக தலைவரான பின்னர் புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா), அறிஞர் அண்ணா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி தவறாக பேசினார். அதுவும் கூட்டணியில் இருந்து கொண்டே தவறாக பேசினார்.” என்றார்.
இந்த கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம்:
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “இந்த கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம் பாஜக, அதிமுக கூட்டணி இருந்திருந்தால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10 சீட் பெற வாய்ப்பு இருந்தது.
வெளியான மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிமுகவினர் இந்த தோல்வியை படிப்பினையாக எடுத்து கொள்வோம். வருகின்ற 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மக்கள் நிறைய எதிர்பார்ப்புடன் அண்ணாமலைக்கு வாக்களித்தார்கள். இதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து இருப்பதால், அண்ணாமலை தான் அளித்த 100 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.” என்றார்.
மேலும், “அண்ணாமலை அடுத்த முறை வேறு தொகுதியில் போய் நிற்பார். அண்ணாமலை ஆரம்பத்தில் விமர்சனம் செய்ததால் தான் கூட்டணி முறிவு ஏற்பட்டது. கூட்டணி இல்லை என்றாலும் அதிமுகவினர் தெளிவாக இருப்போம்.
திமுகவின் தவறான பிரச்சாரத்தால் சிறுபான்மை மக்கள் அதிமுகவை நம்பவில்லை என்று நினைக்கிறோம். பாஜகவை விட கூடுதலாக வாக்குகளை வாங்கியுள்ளோம். பாஜக பொய்யை சொல்லி வாக்கு கேட்டார்கள். அதிமுகவிற்கு சிறு சரிவு வந்தாலும் பிரமாண்ட வெற்றி பெறும். அண்ணாமலை அவர் தலைவர் பதவியை பார்த்து கொள்ளட்டும். அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக வரும். எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். இந்த தோல்வியால் அதிமுக தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். இந்த தோல்வி வெற்றிக்கான படிக்கட்டு” என்று தெரிவித்தார்.