Lok Sabha Elections 2024: காரைக்குடியில் உலகத்தரத்தில் கால்பந்து மைதானம் அமைக்கப்படும் - தேவநாதன் யாதவ்
ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். அதில் சிவகங்கை மாவட்டமும் ஒன்றாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024
2024ஆம் ஆண்டு நாட்டின் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு பரபர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் சூழல் அரசியல் கட்சிகள் இடையேயான கருத்து மோதம் உச்சம் தொட தொடங்கியுள்ளது. பரஸ்பரம் ஒவ்வொரு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடதக்கது.
தேவநாதன் யாதவ் பிரத்தியேக பேட்டி
இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க., கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் அளித்த பிரத்யேக பேட்டியில், “சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 1984 முதல் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் பா.சிதம்பரமும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக களம் காணும் நான் மிகப்பெரும் மார்ஜினில் வெற்றி பெறுவேன். ஏனெனில் சிவகங்கை நாடாளுமன்ற வாக்காளர்கள் மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளனர். காரணம் இந்த நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதியில் உருப்படியான ஒரு தொழிற்சாலை கூட இல்லை. இதனால் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை சரி செய்யும் விதமாக தேர்தலில் வென்ற பின்பு 6 சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு இடத்தில் மிகப்பெரும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு, அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 10,000 நபர்களுக்கு வேலை வழங்கப்படும்.
குறைதீர்வுக்கு தனி அலுவலகம்
அதேபோல சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் எம்.பியாக இருந்த கார்த்திக் சிதம்பரம் பொதுமக்களை சந்திப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே வெற்றி பெற்ற பின் இதனை சரி செய்யும் விதமாக பாராளுமன்ற குறை தீர்ப்பு அலுவலகம் ஒன்று நிறுவ உள்ளோம். இந்த அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். இங்கு மக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான விசயங்களுக்கு மனுக்களை அளிக்கலாம். இங்கு பட்டா மாறுதல், வருவாய்த் துறை பிரச்சனை என எல்லா பிரச்சனைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சார்பாக கடிதமாக தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இணைத்து அனுப்பப்படும். அது குறித்து கண்டறிந்து பிரச்சனைகள் சரி செய்யப்படும். அதேபோல் காரைக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப்படும்.
சிவகங்கை பாராளுமன்றத்தில் பல்வேறு சீர்கேடுகள் உள்ளது. அதனை ஜனநாயக கூட்டணி சார்பாக வென்று மோடியின் அவர்களின் ஆதரவில் பல்வேறு விசயங்களை செய்வேன். சிவகங்கை மாவட்ட பாராளுமன்றத்தில் வெற்றி பெற்று பல்வேறு நல்ல காரியங்களை செய்து முடிப்போம் என நம்புகிறோம். திமுகவிற்கு எதிரான அலை தமிழகம் முழுவதும் உள்ளதால் வெற்றியை எளிமையாக இருக்கும். குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் சிதம்பரம் அவரது குடும்பத்திற்கு மீதான அதிருப்தி மக்களிடையே உள்ளதால் எங்களுக்கு எளிமையான வெற்றி கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். அதில் சிவகங்கை மாவட்டம் மாவட்டமும் ஒன்றாகும்" என நம்பிக்கை தெரிவித்தார்.