Lok Sabha Election 2024: மக்கள் ஓட்டு போடுவதை தாமதப்படுத்தினால் கள்ளஓட்டாக மாறிவிடும்- பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாட்டின் வரிகளை உயர்த்தி மக்களை துன்புறுத்திய திமுகவை இந்த தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து விரட்டி அடிக்க வேண்டும் - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
![Lok Sabha Election 2024: மக்கள் ஓட்டு போடுவதை தாமதப்படுத்தினால் கள்ளஓட்டாக மாறிவிடும்- பிரேமலதா விஜயகாந்த் Lok Sabha Election 2024 Premalatha Vijayakanth says People should pay their dues quickly if they delay it will turn out fake vote - TNN Lok Sabha Election 2024: மக்கள் ஓட்டு போடுவதை தாமதப்படுத்தினால் கள்ளஓட்டாக மாறிவிடும்- பிரேமலதா விஜயகாந்த்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/02/0f17ee2d461699b10fce1f990229d5021712038182095184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ப. கருப்பையாவுக்கு ஆதரவாக, திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தேமுதிக பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து வரிகள், மின்கட்டணத்தை உயர்த்தியதுதான் சாதனை. இதனால், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு கேள்வி குறியாகவிட்டது. இதற்கு மக்கள் தண்டனை தர வேண்டுமெனில் இந்த தோதலில் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். மத்திய அரசும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்திவிட்டது. ஆளும்கட்சி, அதிகாரம், பணம், அதிகாரிகளின் பலம் ஆகியவற்றால் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
திருச்சியில் கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை. ஆனால், இப்போது போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருச்சி மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். மக்களை வஞ்சிக்கும் கூட்டணியே மத்திய, மாநில அரசுகளின் கூட்டணி.
ஜெயலலிதா-விஜயகாந்த் இணைந்து உருவாக்கிய வெற்றிக் கூட்டணியை போன்று, இபிஎஸ்-பிரேமலதா இணைந்து மகத்தான வெற்றிக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். கூட்டணி தர்மத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பாட்டால் நாளும் நமதே, நாற்பதும் நமதே. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு போற்றப்பட்டவர்கள். இவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்த தேர்தலை நாம் சந்திக்கும் தேர்தல் ஆகும். மகத்தான வெற்றியை நாம் பெற வேண்டும்” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)