Lok sabha election 2024: நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீஸ் வழக்குப் பதிவு - காரணம் என்ன?
நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டதாக ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு இடத்திலும் தேர்தல் நடத்தை விதிமீறல் கண்டறியப்பட்டால் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு
வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர் பகுதியில் இந்திய ஜனநாயக புலிகள், கட்சி தலைவர் மன்சூர் அலிகான் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பின்னர் ஆம்பூர் நகர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில் முன் அனுமதி பெறமால், தேர்தல் விதிமுறைகளை மீறி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டதாக ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக (188) பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.