PM Modi: மீண்டும் தமிழ்நாட்டில் ரோட் ஷோ - ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வரும் 9ம் தேதி, மீண்டும் சென்னை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி வரும் 9ம் சென்னையில் ரோட் ஷோ மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை தேர்தல்:
மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள, 39 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து, 900-க்கும் அதிகமானோர் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது. இதையடுத்து வேட்பாளர்களும், கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் முழு கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே சுமார் 6 முறை தமிழ்நாடு வந்த நிலையில், வரும் 9ம் தேதி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பிரதமர் மோடி:
வடசென்னையில் பால் கனகராஜ், தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய சென்னையில் வ்னோஜ் பி. செல்வம் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரமாண்ட வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏற்பாடுகள் அனைத்தும் இறுதியானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் ஆய்வு செய்வதாகவும் தெரிகிறது. சென்னை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நீலகிரி, பெரம்பலூர் மற்றும் வேலூர் ஆகிய தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை சுற்றி வரும் பிரதமர் மோடி:
நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடங்கி, அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு முன்பான திருத்தல பயணங்களையும் தமிழ்நாட்டில் மேற்கொண்டார். அதைதொடர்ந்து, திருப்பூர், நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார். எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடி பேசிய பிரதமர் மோடி, தென்மாநிலங்களிலும் பாஜகவிற்கான ஆதரவு அதிகரித்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை குறிவைக்கும் மோடி:
வடமாநிலங்களில் பாஜக மிகப்பெரிய சக்தியாக இருந்தாலும், தென்மாநிலங்களில் இன்னும் மாநில கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாகவே, இந்த தேர்தலில் பாஜகவின் தென்மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி, தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் வலுவாக காலூன்றி விட்டால், மற்ற தென்மாநிலங்களில் தங்களது வளர்ச்சி எளிமையாகிவிடும் என பாஜக தலைமை கருதுகிறது. இதன்ம் காரணமாகவே மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் எப்படியும் சில எம்.பிக்களையாவது தமிழ்நாட்டில் இருந்து பெற்றுவிட வேண்டும் என பாஜக துடிக்கிறது.