Lok Sabha Election 2024 Phase 5 Voting: 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு, மேற்குவங்கத்தில் உச்சம்
Lok Sabha Election 2024 Phase 5 Voting: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்டத்தில், 60.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Lok Sabha Election 2024 Phase 5 Voting: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்டத்தில், அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 74.65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
5ம் கட்டத்தில் 60.09% வாக்குப்பதிவு:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 4 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்த நிலையில் நேற்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 49 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்முடிவில், நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி 49 தொகுதிகளிலும் சராசரியாக 60.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியான வாக்குப்பதிவு:
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 7 தொகுதிகளில் சராசரியாக 74.65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைதொடர்ந்து பீகார் மாநிலத்தின் 5 தொகுதிகளில் 54.85 சதவிகித வாக்குகளும், ஜம்மு & காஷ்மீரின் ஒரு தொகுதியில் 56.73 சதவிகித வாக்குகளும், ஜார்கண்டின் 3 தொகுதிகளில் 63.07 சதவிகித வாக்குகளும், லடாக்கின் ஒரு தொகுதியில் 69.42 சதவிகித வாக்குகளும், மகாராஷ்டிராவின் 13 தொகுதிகளில் 54.29 சதவிகித வாக்குகளும், ஒடிஷாவின் 5 தொகுதிகளில் 67.59 சதவிகித வாக்குகளும், உத்தரபிரதேசத்தின் 14 தொகுதிகளில் 57.79 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. மும்பை நகரத்தின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் பாதி பேர் மட்டுமே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். அதன்படி, மும்பை தெற்கில் குறைந்தபட்சமாக 47.7% வாக்குகளும், மும்பை வடகிழக்கில் அதிகபட்சமாக 53.8% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Election Commission of India tweets, "Phase 5 of General Election 2024 records Voter Turnout of 60.09% at 11:30 pm on 20th May." pic.twitter.com/X789zlUA1h
— ANI (@ANI) May 20, 2024
24 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஓவர்:
ஐந்தாம் கட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் களம் கண்டது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வாக்குப்பதிவை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 24ல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 114 தொகுதிகளில் மட்டுமே இன்னும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. அந்த தொகுதிகளுக்கு மே 26 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கடைசி இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளன.
ஜுன் 4ம் தேதி முடிவுகள்:
முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவிகிதம், 66.71 சதவிகிதம் 65.68 சதவிகிதம் மற்றும் 69.16 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மீதமுள்ள இரண்டு வாக்குப்பதிவுகள் நிறைவடைந்ததும், மொத்தமாக ஜுன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதேநாளில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.