Local Body Election | வேட்புமனு வாங்கும் அலுவலகங்களில் கொரோனா விதிகளை கடைபிடிப்பது அவசியம் - தஞ்சை ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுரை
வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் தொடர்பாக வட்டார அளவிலான தேர்தல் பார்வையாளரின் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல், பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து அந்த வாக்கு சாவடி மையங்களை ஆய்வு செய்தல் மற்றும் மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்படும் தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளித்தல், தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் வேட்பு மனு வாங்கும் இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தல், வேட்பு வாங்கும் இடங்களில் கொரானா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுக்களை அன்றைய தினமே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்யவும், வேட்பு மனு பரிசீலனையின் போது சரியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். முதலாவது வட்டார தேர்தல் பார்வையாளரின் அறிக்கையை, வேட்பு மனு பரிசீலனை முடிவுற்றவுடன் தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். படிவம் 9 இறுதி செய்யப்பட்டு அச்சுப்பணி நடைபெறும் அச்சகங்களில் உரிய காவல் பாதுகாப்பு உள்ளதா என்பதை உறுதி செய்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணிசரியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
மேலும், இரண்டாவது வட்டார தேர்தல் பார்வையாளரின் அறிக்கையை, வாக்குப்பதிவிற்கு 3 நாட்களுக்கு முன் தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். வாக்கு பதிவுக்கு முதல் நாள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு பொருட்கள் சரியாக உள்ளதா என்பதை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதே போல் ,வாக்குப்பதிவுக்கு முன்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும், கொரானா பாதுகாப்பு பொருட்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது வட்டார தேர்தல் பார்வையாளரின் அறிக்கையை, வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும், வாக்கு எண்ணும் மையங்களில் கொரானா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின் பற்றப்படுவதை உறுதி செய்தும், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணுதல் குறித்தான பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும், நான்காவது வட்டார தேர்தல் பார்வையாளரின் அறிக்கையை, வாக்கு எண்ணும் பணி முடிவுற்றவுடன் தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும், ஐந்தாவது வட்டார தேர்தல் பார்வையாளரின் அறிக்கை உள்ளிட்டவைகள் வட்டார அளவிளான தேர்தல் பார்வையாளரின் பணிகள் ஆகும் என்றார்.
இந்தகலந்தாய்வு கூட்டத்தில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் தவவளன், பட்டுக்கோட்டைவருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மோகன், மாவட்ட கலெக்டரின் தேர்தல் நேர் முக உதவியாளர் மங்கையற்கரசி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.