தமிழகத்திற்கு ஒரு நியாயம்; உ.பிக்கு ஒரு நியாயம்: மத்திய அரசை விளாசிய கனிமொழி
1921வரை உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. அதன்பின்பு நீதிகட்சி ஆட்சியின்போது தான் எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகளிர் தொண்டரணி ஆலோசணை கூட்டம் அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்றார்.
திமுக துணைபொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி பெண்களுக்கு சேலைகள் வழங்கி பேசிய அவர், "இந்த அரங்கம் நிறைந்த கூட்டத்தை பார்க்கும் போது தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது. திராவிட மாடல் ஆட்சி மகளிர்கான ஆட்சிதான். ஏனென்றால் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற நமது தலைவர் ஸ்டாலின், பெண்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம், மேற்கொள்ளலாம் என்று முதல் கையெழுத்திட்டார். யாரையும் எதிர்பார்க்காமல் இந்த பொறுப்பை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். பெண்கள் ஆண்களை எதிர்பார்க்காமல் தனது தாய் தந்தையரை பார்க்க மட்டுமின்றி அவசர நிமித்தமாக மற்ற பணிகளுக்கு செல்வதற்கு இந்த இலவச பேருந்து பயணம் அமைகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் 888ரூபாய் மிச்சப்படுகிறது. வீட்டில் முடங்கி கிடப்பவர்களுக்கு எழுச்சியுட்டும் பணியை முதலமைச்சர் செய்து கொடுத்துள்ளார்.
கலைஞர் ஆட்சியில் 10ம் வகுப்புவரை பெண்கள் படிக்க வேண்டும் என்று கூறியது மட்டுமின்றி திருமண உதவி தொகை வழங்கினார். தற்போது தமிழக முதல்வர் அதனையும் தாண்டி எல்லா பெண்களும் கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்குகிறார். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1000வீதம் 1 கோடியே 15லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் எதிர்பாராத மழை வௌ்ளத்தால் பொதுமக்கள் விவசாயிகள் மீனவர்கள் வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். அதற்கு நாம் நிதி கோரினோம். பிரதமர் இதுவரை எதுவும் வழங்காமல் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் குழு வந்து பார்வையிட்டு வந்து சென்றுள்ளனர். எதுவும் வழங்காத நிலையில் அனைவருக்கும் நானிருக்கிறேன் என்ற உறுதியை வழங்கி தமிழக முதலமைச்சர் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நம்முடைய மாவட்டத்திற்கு நேரில் வருகிறார். தமிழக்திலிருந்து பல்வேறு வகையில் ஒன்றிய அரசு எடுத்துச்செல்லும் வரி வருவாயில் கூட தமிழகத்திற்கு குறைவாகவும் உத்திரபிரதேசத்திற்கு அதிகமாகவும் வழங்கி பிஜேபி அரசு நம்மை வஞ்சித்து வருகிறது. இப்படிப்பட்ட அரசிற்கு நாம் பாடம் புகட்டியாக வேண்டும். வரும் நாடாளுமன்ற தோ்தலில் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு ஓட்டு கேட்க வரும் பிஜேபியினரிடம் எங்கள் பணம் எங்கே என்ற கேள்வியை கேட்பது மட்டுமின்றி யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கும் வகையில் கலைஞர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை திருமண நிகழ்வு உள்ளிட்ட கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் நீங்கள் அரசியல் பிரச்சனை பேசி திண்ணை பிரச்சாரத்தின் மூலம் திமுகவிற்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என பேசினார்.