Lok Sabha Election 2024 Result: மக்களவையில் பெண் எம்.பிக்களின் வரலாறு - 10% வேட்பாளர்கள், எண்ணிக்கை 100-ஐ எட்டுமா?
Lok Sabha Election 2024 Result: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இதுவரை போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Lok Sabha Election 2024 Result: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
அதிகரிக்கும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை, 1957ல் மூன்று சதவிகிதத்தில் இருந்து 2024ல் பத்து சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையின்படி, 2009 மக்களவைத் தேர்தலில் மொத்தம் 7,810 வேட்பாளர்களில் ஏழு சதவீதம் பேர் அதாவது 556 பெண் வேட்பாளர்கள் இருந்தனர்.
ஆனால் நடப்பாண்டு தேர்தலில், 797 பெண்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 8,337 வேட்பாளர்களில் பெண்கள் 9.6 சதவிகிதம் பேர் ஆவர்.
தேசிய கட்சிகளில் பெண் வேட்பாளர்கள்:
ஆறு தேசியக் கட்சிகளில், தேசிய மக்கள் கட்சி (NPP) 67 சதவிகிதம் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் விகிதாச்சாரத்தில் உள்ளது. அதாவது அக்கட்சி வேட்பாளர்களில் மூன்று பேரில் இருவர் பெண்களாக உள்ளனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மற்றும் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்கில் மிகக் குறைந்தபட்சமாக 3 சதவிகித பெண் வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக:
பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதன்படி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 16% பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் கட்சி 13% பெண் வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது. 20 இடங்களுக்கு மேல் போட்டியிடும் மாநில கட்சிகளில், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) 33% பெண் வேட்பாளர்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 29% பெண் வேட்பாளர்களையும் கொண்டுள்ளது. சிறிய மற்றும் பிராந்திய கட்சிகள் பெண் வேட்பாளர்களை அதிகளவில் களமிறக்கியுள்ளன.
நாம் தமிழர் கட்சி 40 வேட்பாளர்களில் 20 பெண்களுடன் சம பாலின பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலா 40 சதவீத பெண் வேட்பாளர்கள் உள்ளனர்.
கடந்த 5 தேர்தல்களில் பெண் வேட்பாளர்களும் & வெற்றியாளர்களும்:
- கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 726 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 78 பேர் வெற்றி பெற்றனர்
- கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 668 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 62 பேர் வெற்றி பெற்றனர்
- கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 556 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 59 பேர் வெற்றி பெற்றனர்
- கடந்த 2004ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 355 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 45 பேர் வெற்றி பெற்றனர்
- கடந்த 1999ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 284 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 49 பேர் வெற்றி பெற்றனர்
முன்னதாக கடந்த 1957ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 45 பெண் வேட்பாளர்களில் 22 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் பாலினத்தவருக்கான வாய்ப்பு:
மேலும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 6 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இதில் நான்கு வேட்பாளர்கள் சுயேச்சையாகவும், இருவர் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்களாகவும் போட்டியிடுகின்றனர். 2014 மற்றும் 2019 தேர்தல்களிலும் ஆறு மூன்றாம் பாலின வேட்பாளர்கள் இருந்தனர் என்று PRS அறிக்கை தரவுகள் தெரிவிக்கின்றன.