Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி நிச்சயம் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரத்யேக பேட்டி..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 80% மக்கள் கை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 80% மக்கள் கை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார். வாக்களித்த பின் பிரத்யேகமாக பேட்டியளித்த அவர்,” ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 80 சதவீத மக்கள் கை சின்னத்தில் வாக்களிப்பார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலப்படுத்துவார்கள். முதலமைச்சரின் 20 மாத கால ஆட்சிக்கும், ராகுல்காந்தியின் நடை பயணத்திற்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பிரகாசமாக உள்ளது. எதிர் அணியினர் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். பேதமின்றி தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாத அலுவலகங்களை மூடியது. இந்த தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுகிறது” என கூறியுள்ளார்.
மேலும், அதிமுக தரப்பில் கையில் இருக்கும் மை அழிகிறது என புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக “எனது விரலில் வைத்த மை அழியவில்லை. அநாவசியமாக குறை கூற வேண்டும் என்பதற்காக இதுபோன்று கூறி வருகிறார்கள். எதிர்கட்சியினர் ஜெயிக்க முடியாது என்பதால் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள்.ஆளுங்கட்சி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில், திமுக. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சாரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
வாக்காளர் விவரங்கள்:
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்களும், 25 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவற்றில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்குப்பதிவு பணிகள் கண்காணிக்கப்பட உள்ளன.
இடைதேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக கட்சியினர் ஈரோடு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரேமலதா, சுதீஷ், ஜி.கே.வாசன், ஆளுங்கட்சி அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள்,மூத்த நிர்வாகிகள் என பலரும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தனர். அதோடு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி கொலுசு, பணம் என வாக்காளர்களுக்கு ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கபட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான், ஆளும் திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கு மதிப்பெண் அளிக்கும் விதமாக இன்றைய தேர்தல் நடைபெற உள்ளது.