Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.
Erode East By Election: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எந்த காட்சி சார்பில், யார் போட்டியிட வாய்ப்புள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வேட்புமனு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அந்த தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ள்ளது. ஆனால், பொங்கல் அரசு விடுமுறை அனைத்தையும் கருத்தில் கொண்டால், வெறும் 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், எந்த கட்சி சார்பில் யார் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது.
காங்கிரஸில் கடும் போட்டி:
2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 2023 இடைத்தேர்தல் இரண்டிலுமே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதனால், இந்த முறையும் அவர்களுக்கே சிட் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று சந்தித்து பேச உள்ளனர். அதன்பிறகு அதிகாரப்பூர்வ அற்விப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட, ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத், தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளருமான ஆர்.எம்.பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ், ராஜப்பா ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
எந்த கட்சி சார்பில் யார் வேட்பாளர்?
அதிமுக முடிவு என்ன? 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 2023 இடைத்தேர்தல் என இரண்டிலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவிற்கு தோல்வியே கிடைத்தது. அதோடு, அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையே அதிமுக புறக்கணித்தது. இந்த இடைத்தேர்தலையும் புறக்கணித்தால் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படும். இதன் காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும் வகையில், நாளை சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
பாஜக நிலைப்பாடு: தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து கூட்டணி தலைவர்களுடன் பேசி அறிவிக்கப்படும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். ஆனால், அக்கட்சியில் உள்ள மற்றொரு பெரிய கட்சியான பாமக, உட்கட்சி பூசலில் சிக்கி உள்ளது. இளைஞர் அணி தலைவர் பதவிக்கு தனது பேரனை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டதால், மகன் அன்புமணி அதிருப்தியில் உள்ளார். மற்றொரு கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரஸ், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
நாதக நிலைப்பாடு: இடைத்தேர்தலி தனித்து போட்டியிடுவதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால் விரைவில் அவர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தங்கள் கட்சி புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.