DMK-EVM: 2ஜி வாக்கு இயந்திரங்கள்தான் வேண்டும்; உச்சநீதிமன்றத்தை நாடும் திமுக! எதனால்?
DMK Petition Over EVM: வாக்கு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய 2ஜி தொழில்நுட்ப நடைமுறையே கொண்டுவர வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
தேர்தலில், வாக்கு இயந்திரங்களில் பழைய நடைமுறையை கொண்டுவர வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
வாக்கு இயந்திரம்:
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது இரண்டு கட்டங்களாக ஜூன் 2 ஆம் தேதி சிக்கிம் மற்றும் அருணாச்சல் ஆகிய மாநிலங்களிலும், ஜூன் 4 ஆம் தேதி இதர மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் முடிவடைந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முழுவீச்சில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு இயந்திரங்களில் பழைய நடைமுறையை கொண்டுவர வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
பழைய முறை வேண்டும்:
அப்போது தெரிவித்ததாவது, தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையில் 2 சதவிகிதம் தவறு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. 22 லட்சம் வாக்குகளில் 46, 000 வாக்குகளில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது.
2 சதவிகிதம் வாக்குகள் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றால் அது சீர் செய்யப்பட வேண்டும். இந்நிலையில், வாக்கு இயந்திரங்களில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம்.
Also Read: Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!
2ஜி தொழில்நுட்பம்:
3வது தலைமுறை இயந்திரங்களை அறிமுகம் செய்யும் தேர்தல் ஆணையம், ஏன் அதில் உள்ள பிழைகளை சரி செய்யவில்லை. ஆகையால், வாக்கு இயந்திரங்களில் 2ஜி தொழில்நுட்பத்துடன் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்.
இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் தயாரிக்கும் இடங்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் நியமனம் சந்தேகத்தையும் எழுப்புகிறது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான, சந்தேகத்தை போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆகையால் வாக்கு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய 2ஜி தொழில்நுட்ப நடைமுறையே கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.