Election Awareness Video : தெளிவா சிந்திங்க.. தகுதியானவங்களுக்கு ஓட்டு போடுங்க.. வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ
Vijay Sethupathi Election Voting Awareness Video : இந்தியாவில் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vijay Sethupathi Election Voting Awareness Video
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேட்புமனு தாக்கல் முடிவடைந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முழுவீச்சில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படியான நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, எப்படி இருக்கீங்க?. நம்ம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தேர்தல் வந்து விட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது நம்ம எல்லாருக்கும் பொதுவான ஒரு மனநிலை என்பது இருக்கும்.“யார் வந்தா நமக்கென்ன?,யார் காசு கொடுக்குறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம், ஓட்டுப்போட்டும் ஒன்னும் ஆகப்போறது இல்ல” அப்படின்னு இருக்கும். இந்த மனநிலை எல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு நாம நமக்காக இல்லைன்னாலும், நம்ம குழந்தைகளின் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்காக ஓட்டு போடணும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது, ஓட்டை விற்பது எந்தளவுக்கு துரோகமோ அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது.
"ஓட்டு போடாம இருக்குறது பச்ச துரோகம்"
— ABP Nadu (@abpnadu) April 3, 2024
மறந்துவிடாதீர்கள்..மறந்தும் இருந்துவிடாதீர்கள்..ஓட்டு போடுங்க – நடிகர் விஜய்சேதுபதி #VijaySethupathi #ElectionCommissionOfIndia #Vote #Election2024 pic.twitter.com/WsbVb1VOqf
உங்களுக்கு பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி அவங்களை பற்றி தெரிஞ்சுகோங்க. அவர்களால் நமக்கென்ன பயன் என யோசிப்பதை விட நாட்டுக்கென்ன பயன் என நினையுங்கள். அதில் நம்முடைய சுயநலமும் இருக்குது. நாமெல்லாம் சேர்ந்தால் தானே நாடு. நமக்கு நம்முடைய இன்றைய நாளும், குழந்தைகளின் எதிர்காலமும் முக்கியம். நம்மை ஆளப்போறது யார், யாரிடம் ஆட்சியை கொடுக்கப்போகிறோம், அவங்களுக்கு என்னெல்லாம் தகுதி இருக்கு, அவங்க இதுக்கு முன்னாடி என்னெல்லாம் செஞ்சிருக்காங்க, சொல்லியிருக்காங்க என எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்க.
இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும், பார்க்கவில்லை என்றாலும், பேசவில்லை என்றாலும் பரவாயில்லை. இன்று முதல் தேர்தல் முடியும் வரை தினமும் அரசியல் பற்றி பேசுங்க, விவாதம் பண்ணுங்க. ஓட்டு போடுற அன்னைக்கு தெளிவா சிந்திச்சு உங்களுக்கு சரின்னு படுறவங்களுக்கு போடுங்க. மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.