Local Body Election | திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் பதவியை பெற திமுக, காங் இடையே கடும்போட்டி
’’திருச்சியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட 15 இடங்களை ஓதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தபட்டது. ஆனால் வெறும் 5 இடங்களை மட்டுமே ஓதுக்கீடு செய்தனர்’’
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 4 ஆம் தேதி முடிவடைந்தது. கடந்த 7 ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் படியல் வெளியிடபட்டது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் கைப்பற்றி மீண்டும் திருச்சியை தனது கோட்டையாக மாற்றிவிட வேண்டும் என தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக தேர்தல்களத்தில் நிற்கிறார்கள். அதேபோன்று அ.தி.மு.க. வினர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, ஆளுங்கட்சிக்கு இந்த தேர்தல் மூலம் பாடம் புகட்டிவிடலாம் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றிவிடவேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது. அ.தி.மு.க.வினரும் தட்டிப்பறித்து விட வேண்டும் என முனைப்பில் தீவிரமாக செயலாற்றுகிறார்கள். இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர் கனவில் தி.மு.க, அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் துணை மேயர்கள், பல சீனியர் கவுன்சிலர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நீண்ட காலம் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்கள் வசம் இருந்தது. தற்போது பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டதால் மேயர் கனவில் ஆண்களே முந்தி நிற்கிறார்கள். பொது என்பதால் பெண்களும் நம்பிக்கை இழக்கவில்லை, ஒரு சில பெண் வேட்பாளர்களிடையேயும் மேயர் கனவு தொடர்கிறது. தி.மு.க.வை பொறுத்த மட்டில் மேயர் வேட்பாளர் யார்? என்பது உறுதியாகிவிட்டதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றனர். அதேபோல் துணை மேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி எழுந்துள்ளது. ஏன் என்றால் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினர் துணையர் மேயர் பதவி கேட்டு அடிதளம் போட்டு வருகிறார்கள். இதனால் துணை மேயர் பதவிக்கு திமுக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய போது அவர்கள் தெரிவித்தது, திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியை தேர்தவர்கள் தான் மேயராக அதிக அளவில் இருந்துள்ளனர். அதேசமயம் மக்களின் நலனைக்கருதி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி பெறுவாரியான ஆதரவுகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில் திருச்சியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட 15 இடங்களை ஓதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தபட்டது. ஆனால் வெறும் 5 இடங்களை மட்டுமே ஓதுக்கீடு செய்தனர். ஆகையால் காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் திமுகவில் துணை மேயர் கனவில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே திருச்சி மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.