Karnataka Election: 'இது என்ன அண்ணாமலைக்கு வந்த சோதனை..' நன்றி சொல்லி கடுப்பேற்றும் காங்கிரஸ்...!
கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.விற்காக பணியாற்ற அண்ணாமலையை அழைத்து வரும் ஆலோசனையை கூறிய நபருக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான சசிகாந்த் செந்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் பாஜகவிற்காக பணியாற்ற அண்ணாமலையை அழைத்து வரும் ஆலோசனையை கூறிய நபருக்கு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான சசிகாந்த் செந்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு மறைமுகமாகவும் விமர்சித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வி:
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில்,தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையிடம் முக்கிய பொறுப்புகள் கொடுத்ததும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் தான், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் பொறுப்பாளரான, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலின் கருத்து உள்ளது.
”அண்ணாமலைக்கு நன்றி”
கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய சசிகாந்த் செந்தில் ”கர்நாடகாவில் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை இருந்ததால் காங்கிரசுக்கு கூடுதலாக 20 இடங்கள் கிடைத்துள்ளன. ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற மூத்த தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேசி மாநில பா.ஜ.க.வை ஒழிக்கும் வேலையில் அண்ணாமலை செயல்பட்டுள்ளார். அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வரும் ஐடியாவை கொடுத்தவருக்கு நன்றி” குறிப்பிட்டுள்ளார்.
தமிழரிடம் தோற்ற அண்ணாமலை:
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கட்சியின் துணை பொறுப்பாளராக பாஜக மேலிடத்தால், பாஜக தமிழக தலைவரும், கர்நாடாகவில் பணியாற்றிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கட்சியின் வாக்குறுதிகள், வேட்பாளர்கள் தேர்வு என எல்லாவற்றிலுமே அண்ணாமலை மிக முக்கிய பங்காற்றினார். பெரும்பாலும் ஹெலிகாப்டரிலேயே அண்ணாமலை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வந்தார்.
பரப்புரை சமயத்தில் பிரதமர் மோடியே தமிழ்நாடு வந்தபோதுகூட, அண்ணாமலை இங்கு வராமல் தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். உடுப்பி, சிக்கமங்களூரு, தாவணகெரே, ஷிவமோகா, மாண்டியா, ஹாசன் பெங்களூரு, உத்தர கன்னடா மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் உட்பட மொத்தம் 86 தொகுதிகள் நேரடியாக அண்ணாமலையின் பொறுப்பில் விடப்பட்டன. பரப்புரை முழுவதும் கன்னடத்திலேயே பேசி மக்களைக் கவர்ந்தார். ஆனாலும் அது பாஜகவிற்கு கைகொடுக்கவில்லை.
சசிகாந்த் செந்தில் செய்த சம்பவம்:
இதனிடையே, அண்ணாமலையை போன்று கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற சசிகாந்த் செந்தில், கடந்த ஓராண்டாகவே காங்கிரஸ் கட்சிக்கான வார் ரூம்களை அமைத்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியே இல்லாத பகுதிகளில் கூட ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை ஒருங்கிணைத்து பொதுக்கூட்டங்களை நடத்தினார்.
ஊழல் ஸ்டிக்கர்:
கர்நாடகாவில் பாஜகவின் ஊழல் ஆட்சியை விமர்சிக்கும் விதமாக 'பே-சிஎம்' என்ற க்யூ ஆர் கோடு போஸ்டர்களை மாநிலம் முழுவதும் ஒட்டும் ஐடியாவை உருவாக்கி அதை செயல்படுத்தினார். அந்த போஸ்டரில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், பாஜவினர் செய்த ஊழல், 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு என்று அனைத்து விவரங்களும் செல்போன் மூலம் மக்கள் அறியும்படி செய்தார். இதுபோன்ற பரப்புரை யுக்திகள் காங்கிரஸுக்கு கைகொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.