பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
பாஜக வேட்பாளருக்கு ஒரே நபர் 8 முறை வாக்களிப்பது போன்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி கடுமைாக முயற்சித்து வருகிறது.
பரபரப்பை கிளப்பியுள்ள வீடியோ:
ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், ஒரே நபர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிப்பது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார்.
A youngster is recording himself voting 8 times to the BJP candidate. The candidate's name and photo seen on the EVM machine is of Mukesh Rajput, From Farrukhabad Lok Sabha constituency. @ECISVEEP @SpokespersonECI@DMFarrukhabadUP
— Mohammed Zubair (@zoo_bear) May 19, 2024
pic.twitter.com/PzN84tKRrX
பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களிப்பதை அந்த நபரே வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். பரூக்காபாத் தொகுதியில் போட்டியிடும் முகேஷ் ராஜ்புத் என்பவருக்கு அந்த நபர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு ஒரே நபர் 8 முறை வாக்களித்தாரா?
ஏற்கனவே, தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் முதல் பல்வேறு தரப்பினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நடுநிலைமையுடன் செயல்படவில்லை, தேர்தல் விதிகளை மீறும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
அதோடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகக்கு வாக்கு செல்வதாக புகார் எழுந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஒரே நபர், பாஜகவுக்கு 8 முறை வாக்களிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. பலத்த பாதுகாப்பு போட்டிருக்கும் வாக்குச்சாவடி மையத்திற்குள் ஒரு நபர் எப்படி இப்படி செய்ய முடியும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எங்கு சென்றார்கள் என கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் குறிப்பிடுகையில், "இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டியாக செயல்படுகிறது" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவின்போது வாக்காளர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தீயிட்டு கொளுத்தியது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதேபோல, மணிப்பூரில் வாக்குச்சாவடி மையம் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.