Edappadi Palanisamy:“இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - பிரதமர் மோடிக்கு இபிஎஸ் அறிக்கை
வாக்கு வங்கி அரசியலுக்காக உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.
இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.
அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) April 23, 2024
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/cKvjcOOaPE
அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
சில தினங்களுக்கு முன் ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “மன்மோகன் சிங் தலைமையிஆனகாங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கே முதல் உரிமை உள்ளது என்றும், அதிக குழந்தை உள்ளவர்களுக்கு இந்துக்களின் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.