(Source: ECI/ABP News/ABP Majha)
Admk manifesto: மாதந்தோறும் மகளிருக்கு ரூ.3000: அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஈபிஎஸ்!
Admk manifesto 2024: நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
Admk manifesto 2024: நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது.
இதில், முதல்கட்டமாக திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்தது. பெரிய கட்சிகள் எதுவும் அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையில், தேமுதிக மட்டும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கிடையே இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கையையும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு பதிலாக மாற்றுத்தேர்வு முறை தேர்வு என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் என்ன?
* ஆளுநர் பதவி நியமன முறையில் கருத்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
* நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை வேண்டும்.
* மாதந்தோறும் ஏழை மகளிருக்கு ரூ.3000 வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்ப்படும்.
* முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.
* உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
* நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை சென்னையில் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
* பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயத்தை மேற்கொண்டு, விலைகள் குறைக்கப்பட வேண்டுமென்று அதிமுக வலியுறுத்தும்.
* சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தப்படும்.
* மத்திய, மாநில அரசுகள், பெருகி வரும் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படும்.
* இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
* நெகிழி பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசின் உதவியோடு மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.
* 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தப்படும்.
* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு கல்விக் கடனை முழுமையாக ஏற்று தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
இவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.