TN Public Exam: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பொதுத் தேர்வுகள் எப்போது?- அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
இந்த நிலையில், பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
TN Public Exam 2024:
நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு மத்தியில் நடைபெற உள்ள நிலையில், அதேகால கட்டத்தில்தான் பள்ளி பொதுத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. இந்த நிலையில், பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய செயலியை இன்று (அக்.31) சென்னையில் அறிமுகம் செய்தார். இதன்மூலம் ஆசிரியர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ’’ 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் உணர்வை வெளிப்படுத்துகின்றனர். அடுத்தடுத்து 2014, 17, 19-ல் தேர்ச்சி பெற்ற 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு விதமான உணர்வை அரசிடம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
போட்டித் தேர்வு கட்டாயமா?
எல்லோரின் உணர்வுகளையும் மதித்து, திருப்திப்படுத்தும் வகையில் வழிவகைகளை அமைத்து, சிறந்த முடிவு எடுக்கப்படும். தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் வகையில், எதிலுமே அனுசரித்துப் போகாமல், தரமான ஆசிரியர்களை உருவாக்க உள்ளோம்’’ என்று அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
’’மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, ஆட்சியர் முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் திறந்துவிடப்பட்டுள்ள தொட்டிகள், ஆழ்துளை போர்களை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கான மின்சார வாரியப் பெட்டிகள் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமிஸ் செயலியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்களின் வருகையையும் மாணவர்களின் வருகையையும் பதிவிட்டால் போதும். பிற செயல்பாடுகளை மேற்கொள்ள வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். விரைவில் அதுகுறித்தும் அறிவிப்பு வெளியாகும்.
இதையும் வாசிக்கலாம்: Teachers App:ஆசிரியர்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க புது செயலி: அறிமுகம் செய்த அமைச்சர் அன்பில
தீபாவளிக்குப் பிறகு பொதுத் தேர்வு அறிவிப்பு
ஏப்ரல் முதல் வாரத்தில் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பொதுத் தேர்வு குறித்துத் திட்டமிட்டு வருகிறோம். டிசம்பர் மாதத்துக்குள் அரையாண்டுத் தேர்வு பாடத்திட்டம் முடிக்கப்பட்டு, தயாராக வேண்டும். தீபாவளிக்குப் பிறகு, பொதுத் தேர்வு தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்க உள்ள நிலையில், கூடுதல் பணி இடங்களை அறிவிக்க வாய்ப்பில்லை. நிதித்துறை ஒப்புதல் வழங்கியதைப் பொறுத்து இந்த இடங்கள் முடிவு செய்யப்படும்’’.
இவ்வாறு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாம்: MBBS Counselling: தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு; மாநில அரசே நடத்தும்- தேதிகள் அறிவிப்பு