Scholarship: ஜப்பானில் இலவசமாக உயர்கல்வி: உணவு, இருப்பிடம் என முழு நிதியுதவி- உதவித்தொகை பெறுவது எப்படி?
மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணம், தினசரி செலவுகளுக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான இருவழி விமான டிக்கெட் வழங்கப்படும்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வழக்கமாக மாணவர்கள் செல்லும் நாடுகளுக்கு அப்பால், வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஜப்பான் ஒரு சிறந்த தேர்வாக மாறி வருகிறது.
ஜப்பான் வழங்கும் முழு நிதியுதவி கொண்ட MEXT (Ministry of Education, Culture, Sports, Science and Technology) உதவித்தொகை மூலம், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஜப்பானின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெறலாம். இதற்கான கல்வி கட்டணம், அன்றாடச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் அனைத்தும் இந்த உதவித்தொகையின் கீழ் முழுமையாக வழங்கப்படும்.
எதற்காக இந்த உதவித்தொகை?
MEXT உதவித்தொகையானது ஜப்பானின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. இது கல்வித் திறன்மிக்க சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்துதல், கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
என்ன நன்மைகள்?
இந்த உதவித்தொகை ஜப்பானில் படிப்பதற்கான அனைத்து முக்கியச் செலவுகளையும் உள்ளடக்கிய ஒரு முழு நிதியுதவி திட்டமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பாடங்களுக்கான முழு கல்வி கட்டணம், தினசரி செலவுகளுக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான இருவழி விமான டிக்கெட் வழங்கப்படும். உதவித்தொகை பெறுபவர்கள் ஜப்பான் முழுவதும் உள்ள தேசிய, பொது அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுவார்கள்.
இதற்கு இளங்கலை மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இளங்கலை உதவித்தொகை பொதுவாக ஐந்து ஆண்டுகள் ஆகும். இதில் ஒரு வருடம் தீவிர ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் நான்கு வருட பட்டப்படிப்பு அடங்கும். பெரும்பாலான இளங்கலை திட்டங்கள் முதன்மையாக ஜப்பானிய மொழியில் நடத்தப்படுவதால், நான்கு ஆண்டு கற்பிக்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய மாணவர்கள் ஜப்பானிய தூதரகம் அல்லது அதன் நியமிக்கப்பட்ட துணைத் தூதரகங்கள் மூலம் MEXT உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் காலக்கெடு மாறுபடும், ஆனால் படிவங்கள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் வெளியிடப்படும்.
விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்றிதழ்கள், கல்வி இலக்குகள் மற்றும் ஜப்பானைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் அடங்கிய ஒரு நோக்க அறிக்கை (statement of purpose), கல்வி நிறுவனத்திடமிருந்து ஒரு பரிந்துரை கடிதம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவச் சான்றிதழ் போன்ற கூடுதல் ஆவணங்களும் தேவைப்படலாம்.

தேர்வு முறை
தேர்வு செயல்முறை பல நிலைகளைக் கொண்டது. விண்ணப்பங்களின் ஆரம்ப பரிசோதனைக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கும், அதைத் தொடர்ந்து தனிப்பட்ட நேர்காணலுக்கும் அழைக்கப்படுவார்கள். இரண்டு நிலைகளிலும் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இறுதி ஒப்புதலுக்காக உதவித் தொகை திட்டத்துக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பின்னர் அரசு நிதியுதவி பெறும் அறிஞர்களாக ஜப்பானுக்குப் பயணிப்பார்கள்.
என்ன தகுதி?
இதற்கு விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் திறனைக் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அந்தந்த கல்வி ஆண்டிற்கான வயது வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் தெளிவான கல்வி ஊக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். பெரும்பாலான இளங்கலை படிப்புகள் ஜப்பானிய மொழியில் கற்பிக்கப்படுவதால், விண்ணப்பதாரர்கள் ஜப்பானிய மொழியைக் கற்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.






















