வேலூர்: கானாற்றில் வடியாத வெள்ளம் - தற்காலிக பாலம் அமைத்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
''ஒரு சிறிய தரைபாலத்தை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை''
வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான பாலாறு, பொன்னை ஆறு, கவுண்டன்ய மகாநதி ஆறு ஆகியவற்றில் வரலாறு காணாத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு தற்போது வெள்ளம் குறைய தொடங்கியுள்ளது. இருந்தபோதும் தற்போது வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் மட்டும் இன்றி சிறிய மலைகளில் உருவாகும் கானாற்று ஓடைகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல குக்கிராமங்களுக்கிடையேயான பாதை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்தவகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ளது மூலகாங்குப்பம் கிராம. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இக்கிராமத்திற்க்கு அருகில் உள்ள மலை பகுதியில் இருந்து உருவாகும் காட்டாறு (கானாறு) மூலகாங்குப்பம் கிராமத்திற்கு மத்தியில் செல்கிறது. தொடர் மழை காரணமாக இக்காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் ஒரு கரையில் இருக்கும் மக்கள் மறு கரைக்கு செல்ல மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இக்கிராமத்துக்கான அரசு தொடக்கப்பள்ளியும் காட்டாற்றின் மறு கரையில் உள்ள பகுதியில் தான் அமைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்தும், மழைக்கான பள்ளி விடுமுறைகள் முடிந்தும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் மூலகாங்குப்பம் கிராமத்தின் குறுக்கே செல்லும் காட்டாற்றில் வெள்ளம் வடியாததால் அச்சம் காரணமாகவும், பாதுகாப்பு கருதியும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அக்கரையில் உள்ள அரசுப் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர். இதனால் மூலகாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் ஒன்று சேர்ந்து தாமாக முன்வந்து தங்களதுசொந்த செலவில் மரங்கள் மற்றும் மூங்கில் மூலம் காட்டாற்றின் குறுக்கே தற்காலிக பாலத்தை அமைக்க முடிவு செய்து தற்போது அதனை செய்தும் முடிந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ஊர் மக்களால் காட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக தரைபாலம் மூலம் காட்டாற்றை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். இது ஆபத்தான நிலை என்றாலும் வேறு வழியின்றி இதனை பின்பற்றி வருகின்றனர் கிராம மக்கள்.
இது குறித்து மூலகாங்குப்பம் கிராம மக்கள் கூறுகையில், மழை இல்லாத காலகட்டத்தில் பொது மக்களும், பள்ளி மாணவர்களும் காட்டாற்றை கடந்து சென்றுவிடுவோம். ஆனால் தற்போது மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் காட்டாற்றை கடக்க முடியவில்லை. குறிப்பாக காட்டாற்றுக்கு அக்கரையில் அரசு நடுநிலை பள்ளி உள்ளதால் வெள்ள காலத்தில் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் தங்கள் கிராமத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்து ஒரு சிறிய தரைபாலத்தை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.