UPSC Prelims Postponed | யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் ஒத்திவைப்பு..
ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 22 குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வைத் தள்ளிவைத்து யு.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 22 இந்திய குடிமை பணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு முதல்நிலை தேர்வு வரும் ஜூன் மாதம் 27ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தேர்வுகள் தள்ளிப்போகும் என்ற கருத்து நிலவிவந்தது. பல்வேறு மாநிலங்களும் கொரோனா பாதிப்பால மிகவும் தவித்து வரும் சூழலில் இந்த தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்துவது கடினம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தற்போது கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமாக உள்ளதால் வரும் ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த முதல்நிலை தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி நடத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வரும் சூழலில் சரியாகத் தேர்வுக்கு படிக்க முடியவில்லை என்று மாணவர்கள் வருத்தத்துடன் இருந்தனர். இந்த தேர்வு தள்ளிவைப்பு அறிவிப்பு அவர்களுக்கு கூடுதல் நேரத்தை அளித்துள்ளது. இதனால் அவர்கள் சற்று நிம்மதியாக தேர்வு எதிர்கொள்ள தயாராகலாம். ஏற்கெனவே கடந்த ஆண்டும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு மே மாதத்திற்கு பதிலாக அக்டோபர் மாதம் 4ம் தேதி நடத்தப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தேர்வின் நேர்காணல் மட்டும் இன்னும் நடைபெறவில்லை. இந்த நேர்காணல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தது. எனினும் கொரோனா தொற்று அதிகரித்ததால் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நேர்காணல் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வு அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.