NEET UG 2024 Exam: "நீட் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்" மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை!
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் NEET, JEE மற்றும் CUET தேர்வுகளுக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வில் பிரச்னைகளை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
![NEET UG 2024 Exam: Union Education Minister Dharmendra Pradhan says Don't politicize the NEET issue NEET UG 2024 Exam:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/225add1d630614e8fd7267d6ceb961421718272011307572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள்:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இதுவரை இல்லாத வகையில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. முன்னதாக வினாத்தாள் மோசடி, ஆள்மாறாட்ட விவகாரம் என பிரச்சினையில் சிக்கிய நீட் தேர்வு, முடிவுகளுக்கு பின் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
ஒரே தேர்வறையைச் சேர்ந்த பலருக்கும் கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கியது. 720 மதிப்பெண்களுக்கு அடுத்து 715 மதிப்பெண்கள் தான் இரண்டாவது அதிகபட்ச மதிப்பெண்ணாக இருக்கும். ஆனால் நடப்பாண்டில் 718, 719 மதிப்பெண்கள் எல்லாம் எடுத்ததால் பிற மாணவ, மாணவியர்கள் தேசிய தேர்வு முகமையை கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. தேர்வு எழுதியவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வழக்கு:
இதனிடையே நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தேர்வறையில் நேரக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. மேலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், "நீட் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீட் தேர்வை 24 லட்சம் மாணவர்கள் எழுதி, 13 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 13 மொழிகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்காக சுமார் 4,500 மையங்கள் உள்ளன. தேர்வு நடைபெற்ற போது, 6 மையங்களில் தவறான வினாத்தாள்கள் தவறாக அனுப்பப்பட்டன, இந்த மையங்களில் சுமார் 1,563 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
அரசியலாக்க வேண்டாம்:
கால இழப்பை கருத்தில் கொண்டே மறுதேர்வுக்கு பதிலாக கருணை மதிப்பெண் வழங்க தேசிய தேர்வு முகமை நிபுணர் குழுவை அமைத்து முடிவெடுத்தது. இதில் சில மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றது தெரிய வந்தது. இதனால் சிலர் நீதிமன்றத்தை நாடினர். அதன்படி 1,563 மாணவர்கள் நீட் தேர்வில் மீண்டும் கலந்துகொள்ளலாம் அல்லது கருணை மதிப்பெண் அல்லாத அசல் மதிப்பெண்ணை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் NEET, JEE மற்றும் CUET தேர்வுகளுக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வில் பிரச்னைகளை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அவர் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)