நிறைவேற்றாத திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள்: போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர் சங்கம்!
தமிழக முதல்வர், சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்க்காவிட்டால் டிசம்பர் மாதம் முழுவதும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை கண்டித்து இன்று (10.11.2024) தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் கரூரில் நடைபெற்றது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’கடந்த 08ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வருகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
1 மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
தமிழக முதல்வரின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விரோத அறிவிப்பை கண்டித்து அனைத்து அரசு அலுவலகங்களிலிருந்தும் ஊழியர்கள் அனைவரும் 12.11.2024 செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழக முதல்வர், சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்க்காவிட்டால் டிசம்பர் மாதம் முழுவதும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும்.
கோரிக்கை மாநாடு
• 25.01.2025-ல் மாவட்டங்களில் கோரிக்கை மாநாடு நடத்தப்படும்.
• தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊர் புற நூலகர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள், அனைத்துத் துறைகளிலும் புற ஆதார முறையில் பணிபுரியும் கணினி இயக்குபவர்கள், கொசுப் புழு ஒழிப்பு ஊழியர்கள், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு ”வாழ்வாதார ஊதியம் கோரும்” மாநாட்டை 08.02.2025 (சனிக்கிழமை) திருச்சியில் நடத்தப்படும்.
• 20.02.2025 ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தை மிக சக்தியாக நடத்துவது உள்ளிட்ட அடுத்தடுத்து தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!