UGC: இனி அனைத்துக் கல்லூரிகளிலும் இளநிலை படிப்பில் இது கட்டாயம்: யுஜிசி உத்தரவு- விவரம்
சுற்றுச்சூழல் கல்விக்கென உருவாக்கப்படும் பாடத்திட்டத்தில் பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற தற்கால சூழலியல் சவால்கள் இடம்பெற வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் சுற்றுச்சூழல் கல்வி பாடத்திட்டத்தை சேர்ப்பது தொடர்பாக யுஜிசி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஜோஷி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையிலேயே...
உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுற்றுச்சூழல் கல்வி குறித்த பாடத்திட்டத்தை இடம்பெறச் செய்வது தொடர்பாக ஏற்கெனவே உரிய வழிகாட்டுதல்கள் 2023ஆம் ஆண்டில் யுஜிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், உச்ச நீதிமன்ற உத்தரவால் இது அமலாக்கப்பட்டு உள்ளது.
குழு கற்பித்தல்
சுற்றுச்சூழல் கல்விக்கென உருவாக்கப்படும் பாடத்திட்டத்தில் பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற தற்கால சூழலியல் சவால்கள் இடம்பெற வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் கற்பித்தலில் மாணவர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்கும் வகையில் குழு கற்பித்தல் உள்ளிட்ட புத்தாக்க அணுகுமுறைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
யுஜிசி தளத்தில் கூடுதல் வழிகாட்டல்
இது குறித்து கூடுதல் தகவல்கள் யுஜிசி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டின் சுற்றுச்சூழலுக்கான பொறுப்பை சிறந்த முறையில் கட்டமைக்கும் வகையில் அது தொடர்பான கற்றல் முறைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க உயர்கல்வி நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு யுஜிசி செயலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிக்கையை https://www.ugc.gov.in/pdfnews/0871920_UGC-letter-regarding-request-for-implementation-of-UGC-Guidelines-and-Curriculum-Framework-for-Environment-Education-at-the-UG-level_0001.pdf என்ற இணைப்பில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://www.ugc.gov.in/