அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
கல்வி வளர்ச்சி மற்றும் வேலை – தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைக்குக் கொண்டு வரும் வகையில், ஆசிரியர்கள் விடுமுறையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, UGC (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) வரைவு விதிமுறைகள், 2025-ஐ ஜனவரி 6 அன்று வெளியிட்டது. இதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கருத்துகள்/ பரிந்துரைகளைத் தெரிவிக்கலாம் என்று யுஜிசி அழைப்பு விடுத்தது.
புதிய வரைவறிக்கை அம்சங்கள் சொல்வது என்ன?
அதன்படி அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் இல்லை என்று யுஜிசி புதிய வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2018 விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு, புதிதாகக் கொண்டு வரப்போவதாக வரைவறிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விப் பணியாளர்களுக்கான பணியாளர் விகிதம், தகுதிகாண் காலம் மற்றும் உறுதிப்படுத்தல், விடுப்புகள், கற்பித்தல் நாட்கள், கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாக உறுதிமொழிகள், மூத்த பதவி மற்றும் தொழில்முறை நெறிமுறைகள் குறித்த வரைவு வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
உயர்கல்வி விடுமுறை (study leave)
ஆரம்ப நிலையில் உள்ள இளம் உதவிப் பேராசிரியர்கள், கல்வி கற்பதற்காக அதிகபட்சம் 3ஆண்டுகள் வரை விடுமுறை எடுக்கலாம். எனினும் அவர்கள் அதற்குக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
ஓய்வுக்கால விடுமுறை (Sabbatical leave)
அதேபோல நிரந்தர ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் ஓராண்டு வரை தனிப்பட்ட அல்லது தொழில்நுட்பக் காரணங்களுக்காக ஓய்வுக்கால விடுமுறை அளிக்கப்படும். எனினும் அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
தற்செயல் விடுப்பு (casual leave)
ஆசிரியர்கள் ஒவ்வோர் ஆண்டும் அதிகபட்சம் 8 நாட்கள் கேஷுவல் லீவ் எனப்படும் தற்செயல் விடுப்பை எடுத்துக்கொள்ளலாம்.
ஈட்டிய விடுப்பு ( Earned Leave )
Earned Leave எனப்படும் ஈட்டிய விடுப்புக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல அதிகபட்சம் 300 நாட்கள் ஈட்டிய விடுப்பைப் பெறலாம். வேலையில் 1/30 விகிதத்தில் இந்த விடுமுறை உருவாக்கப்படும்.
மகப்பேறு விடுமுறை
பெண் ஆசிரியர்களுக்கு 180 நாட்கள் அதாவது, 6 மாதத்துக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்பட உள்ளது. தங்களுடைய வேலை நாட்களில் இரு முறை இந்த விடுமுறையை ஆசிரியர்கள் பெற முடியும்.
கல்வி வளர்ச்சி மற்றும் வேலை - தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைக்குக் கொண்டு வரும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
இதற்கான கூடுதல் தகவல்களை https://www.ugc.gov.in/pdfnews/5577009_DRAFT-GUIDELINES-ON-CADRE-RATIO-PERIOD-OF-PROBATION-and-CONFIRMATION-LEAVES-TEACHING-DAYS-ACADEMIC-RESEARCH-AND-ADMINISTRATIVE-COMMITMENTS-SENIORITY-AND-CODE-OF-PROFESSIONAL-ETHICS-FOR-TEACHERS-AND-OTHER-ACAD.pdf என்ற முகவரியில் பெறலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

