UG Admissions 2022: க்யூட் தேர்வு முடிவுகள்: தமிழ்நாடு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலுமான மத்தியப் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலுமான மத்தியப் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் டெல்லி பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுவை பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படவில்லை.
க்யூட் இளங்கலை 2022 மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்க உள்ளன. இதில் 21,159 பேர், அதாவது 12,799 பெண் தேர்வர்கள் மற்றும் 8,360 ஆண் தேர்வர்கள் குறைந்தபட்சம் ஒரு பாடத்திலாவது 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மானுடவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கு இடம் கிடைப்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அறிவியல் படிப்புகளுக்கு எளிதில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை
2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 12 வரை சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் aud.ac.in என்ற இணையதளம் மூலம் இளங்கலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று (செப். 20ஆம் தேதி) தொடங்கியுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் cutncuet.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் லாகின் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 25 கடைசித் தேதி ஆகும்.
ஆந்திரப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம்
ஆந்திப் பிரதேச பல்கலைக்கழகத்திலும் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இங்கு இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகள், ஒருசில தனியார் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET - UG தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
குறிப்பாக 13 மொழிகளில் 10 நகரங்களில் சுமார் 9,68,201 பேர் இந்தத் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 4,29,228 பெண்களும், 5,38,965 ஆண்களும் இருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் செப்.16ஆம் தேதி வெளியாகின. இந்த முடிவுகள் அனைத்தும் தேர்வர்கள் விண்ணப்பித்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.