TNPSC Group 4 Notification: 3935 பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு, தேர்வு முறை, பாடத்திட்டம்- முழு விவரம்!
TNPSC Group 4 Notification 2025: இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர் பணியிடங்களுக்கு 18 வயது நிறைந்திருந்தால் போதுமானது.

3935 பணியிடங்களைக் கொண்ட குரூப் 4 தேர்வுக்கு இன்று (ஏப். 25) முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது. மாநிலத்தின் அதிகம் பேர் போட்டி போடும் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு, தேர்வு முறை எப்படி? காணலாம்.
10ஆம் வகுப்பே கல்வித் தகுதி, ஒரே ஒரு தேர்வு என்பதால், ஏராளமான தேர்வர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
என்னென்ன பதவிகள்?
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.
வயது வரம்பு
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அதே நேரத்தில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர் பணியிடங்களுக்கு 18 வயது நிறைந்திருந்தால் போதுமானது.
அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே மாற்றுத் திறனாளிகளுக்கு 42 ஆகவும் முன்னாள் ராணுவத்தினருக்கு 50 ஆகவும் கைம்பெண்களுக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
- 10ஆம் வகுப்புத் தேர்ச்சி
- பொதுக் கல்வித் தகுதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
- தட்டச்சர் பணிகளில் சேர, அரசு தொழில்நுட்ப தமிழ் அல்லது ஆங்கிலத் தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
ஓஎம்ஆர் முறையில் குரூப் 4 தேர்வு நடத்தப்படும்.
பகுதி அ- தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு – 150 மதிப்பெண்களுக்கு
பகுதி ஆ – பொது அறிவு
பகுதி இ – திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு – ஆ, இ இரண்டும் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- ஒரு முறைப் பதிவில் பதிவு செய்த பின்பு, விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்க வேண்டும். அதில் பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்திருக்க வேண்டும்.
- அதேபோல ஒரு முறைப் பதிவுடன் ஆதாரை இணைக்க வேண்டும்.
- தொடர்ந்து APPLY என்ற பகுதியைச் சொடுக்கி, போதிய விவரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பாடத்திட்டம்



முழு விவரங்களை https://tnpsc.gov.in/Document/tamil/Grp%20IV%20Tamil.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.






















