Group 4 Result: 2023-ல் குரூப் 4 நோட்டிஃபிகேஷன்; 2025-ல் ரிசல்ட்- டிஎன்பிஎஸ்சி தாமதத்தால் தவிக்கும் தேர்வர்கள்!
TNPSC Group 4 2024 Result: 2023-ல் குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியான நிலையில், 2024-ல் தேர்வு நடந்து 2025-ல் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதற்கு, தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் அசிஸ்டண்ட் எனப்படும் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இப்போது வனத்துறை பணிகளும் குரூப் 4 தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான பணியிடங்கள், முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் இல்லாமல், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம். இந்த நிலையில் கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் தள்ளிப் போயின.
8 மாதங்கள் கழித்து 2022 தேர்வு முடிவுகள்
இதற்கிடையே 2022ஆம் ஆண்டு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, 2022 மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தாமதமானது. 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 8 மாதங்கள் கழித்து மார்ச் 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
தொடர்ந்து 2023ஆம் ஆண்டுக்கான உத்தேச போட்டித் தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதில், நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் கவுன்சிலிங் முடிவுகள் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
அறிவிப்பும் நடந்ததும்
இந்த நிலையில், பிப்ரவரி மாதத்துக்கு பதில் ஜூன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தொடர்ந்து ஒரே வாரத்தில் 18ஆம் தேதி அன்றே தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகின.
எனினும் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து 2025 ஜனவரி மாதம்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அண்மையில் தெரிவித்துள்ளது. இதனால் அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தேர்வு முடிவுகளே இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

