TNPSC Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! கட்டணம், தேர்வு தேதி!
TNPSC Group 2 Mains Application: குரூப் 2 ஏ தேர்வு, பிப்ரவரி 8ஆம் தேதி அன்று ஒரே நாளிலேயே முதல் தாளும் இரண்டாம் தாளும் நடைபெற உள்ளது. இவை இரண்டும் ஓஎம்ஆர் தாளில் கொள்குறி வகையில் நடைபெற உள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு டிச. 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பக் கட்டணம், தேர்வு தேதி, விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.
சார் பதிவாளர், கூட்டுறவுத் துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகின.
முதன்மைத் தேர்வு தேதிகள்
இதில் தேர்வு செய்யப்பட்டோர், முதன்மைத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர். முதன்மைத் தேர்வு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. குறிப்பாக முதல் தாள் பிப்ரவரி 8ஆம் தேதி அன்றும் இரண்டாம் தாள் பிப்ரவரி 22ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. முதல் தாள் தமிழ் மொழி தகுதித் தேர்வாகவும் இரண்டாம் தாள் பொது அறிவாகவும் நடைபெற உள்ளது. விவரித்து எழுதும் வகையில் இந்தத் தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல குரூப் 2 ஏ தேர்வு, பிப்ரவரி 8ஆம் தேதி அன்று ஒரே நாளிலேயே முதல் தாளும் இரண்டாம் தாளும் நடைபெற உள்ளது. இவை இரண்டும் ஓஎம்ஆர் தாளில் கொள்குறி வகையில் நடைபெற உள்ளன.
விண்ணப்பக் கட்டணம்
இந்த இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். டிசம்பர் 29ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் குரூப் 2 A பணிகளில் உள்ளடக்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை), தாள்-II (பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு) கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகக் காரணங்களுக்காக குரூப் 2 A பணிகளின் தாள்-II -ற்கான முதன்மைத் தேர்வு OMR முறையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
828 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு 1,126 பேரும் குரூப் 2 ஏ தேர்வுக்கு 9,457 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/






















