Group 1 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
ஆகஸ்ட் 10 முதல் 13 வரை நடைபெற உள்ள குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் http://www.tnpscexams.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணிகளில் உள்ள காலியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர்.
5 மாதங்களை கடந்து, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வுகள் ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 16/2022, நாள் 21.07.2022 - இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 1) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 (முற்பகல்) முதல் 13.08.2023 (முற்பகல்) வரை நடைபெற உள்ளது. குறிப்பாக தேர்வு சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும்.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (Hall Ticket) இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். இவை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப் பக்கம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்''.
இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Naan Mudhalvan UPSC Scheme: நான் முதல்வன் திட்டம்.. யு.பி.எஸ்.சி. ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு -விண்ணப்பிப்பது எப்படி?