TNEA Students Data Leak: அதிர்ச்சி… பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1 லட்சம் மாணவர்களின் விவரங்கள் கசிவு- பின்னணி என்ன?
அடுத்தடுத்த சுற்றுகளில் சேர விண்ணப்பித்து உள்ள மாணவர்களின் விவரங்கள் மொபைல் எண்களுடன் வெளியாகி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2024- 25ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கலந்தாவில் கலந்துகொள்ளும் மாணவர்களின் மொபைல் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சிறப்புப் பிரிவு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தற்போது முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் சேர விண்ணப்பித்து உள்ள மாணவர்களின் விவரங்கள் மொபைல் எண்களுடன் வெளியாகி உள்ளன. குறிப்பாக 1 லட்சத்துக்கும் அதிகமானோரின் விவரங்கள் தனியார் கல்லூரிகளுக்கான இடைத் தரகர்களுக்கு விற்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் தகவல்கள், 2 3ஆம் கட்டத் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட தகவல்
ஆண்டும்தோறும் கலந்தாய்வை நடத்தும் டோட் (DOTE) எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை மதிப்பெண்கள், பெயர் உள்ளிட்ட விவரங்களைத் தனது இணையதளத்தில் வெளியிடும். ஆனால் அதில், மாணவர்களுடைய மொபைல் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இடம்பெறாது. ஆனால் தற்போது மாணவர்களுடைய மொபைல் எண்களோடு கூடிய விவரங்கள் வெளியே கசிந்துள்ளன.
ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்
முன்னதாக ஒரே நேரத்தில் 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியர் பணிபுரியும் அதிர்ச்சித் தகவலும், 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் வேலை செய்யும் அவல விவரமும் ஆதாரத்துடன் அம்பலமானது. முழு நேரப் பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் ஒரு கல்லூரிக்கு மேல் பணியாற்றக் கூடாது என விதிமுறை இருந்தும் அதனைப் பின்பற்றாமல், ஒருவரே பல கல்லூரிகளில் பணியாற்றுவதற்கு அண்ணா பல்கலைக்கழகமே அனுமதி வழங்கியது அம்பலமானது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. துணை வேந்தர் தெரிவித்து இருந்தார். இந்த சர்ச்சை ஓயும் முன்னரே, மாணவர்களின் விவரங்கள் கசிந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளிக்க முடிவு
இதுகுறித்துக் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி ஆணையர் கூறும்போது, ’’சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. எங்களின் தரப்பில் இருந்து எந்த விவரங்களும் கசியவில்லை. அதே நேரத்தில் ஒரு லட்சம் மாணவர்களின் விவரங்கள் கசிந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தொழில்நுட்ப கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tneaonline.org/